

சோழவந்தான்:
சோழவந்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள ரிஷபம், இரும்பாடி, தேனூர், தோடனேரி, கள்ளிக்குடி, சமயநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு காற்று, இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் பெய்த கன மழையால் இப்பகுதியில் வயல்வெளியில் தண்ணீர் தேங்கியுள்ளது. குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர்.
மேலும் அக்கிராமங்களில் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் விளைந்த நெற்கதிர்கள் கீழே சாய்ந்து சேதம் அடைந்துள்ளன. மேலும் வாழைத்தோட்டங்களிலும் வாழை மரங்கள் சாய்ந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பாசன விவசாயிகள் சங்க மதுரை மேற்கு ஒன்றிய செயலாளர் நாகேந்திரன் கூறியதாவது:-
கன மழையில் சோழவந்தான் மற்றும் இப்பகுதியில் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் வயலில் உள்ள தண்ணீரில் சாய்ந்து சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
வயல் பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். ேமலும் இப்பகுதியில் உள்ள வாழைத் தோட்டங்களில் வாழைகள் ஒடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளன. ஏற்கனவே ஊரடங்கு காரணமாக வாழை இலை, வாழைக்காய், வாழைப் பழங்கள் விற்பனை இல்லாமல் விவசாயிகள் நஷ்டத்தில் உள்ளனர். மரத்திலேயே வாழைப் பழங்கள் பழுத்து அழுகிப்போய் விட்டன.
இந்த நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் மீதி இருந்த வாழை மரங்கள் பலத்த காற்று, மழையால் ஒடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளன. எனவே நஷ்டம் அடைந்துள்ள விவசாயிகளுக்கு அரசு தக்க நிவாரண உதவியை வழங்கிட வேண்டும்,” என்றார்.
வாடிப்பட்டி உதவி தோட்டக்கலை அலுவலர் சுந்தரி மற்றும் அலுவலர்கள் சேதம் அடைந்த பயிர்களை நேரில் பார்வையிட்டு சேத விவரங்களை சேகரித்தனர்.
எனவே பாதிப்புகளுக்கு உரிய நிவாரண உதவிகளை விரைவாக வழங்கிட வேண்டும் என்று விவசாயிகள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.