புதுச்சேரியில் ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிப்பு -என்னென்ன தளர்வுகள்?

கடற்கரை சாலை, பூங்காக்கள் காலை 5 முதல் 9 வரை நடைப்பயிற்சி செல்வோருக்காக திறக்கப்படும் என புதுவை அரசு தெரிவித்துள்ளது.
புதுச்சேரி சட்டசபை
புதுச்சேரி சட்டசபை
Published on

புதுச்சேரி:

புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில், ஊரடங்கு வரும் 30ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து பார்ப்போம்.

புதுச்சேரியில் அனைத்து திரையரங்குகள், மல்டி காம்ப்ளக்ஸ் திறக்க அனுமதி இல்லை. சமூக, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு உள்ள தடை நீடிக்கும். அனைத்து அரசு அலுவலகங்களும் வழிகாட்டு வழிமுறைகளுடன் இயங்கும். கொரோனா பணிகளில் ஈடுபடுவோரை மீண்டும் துறைப்பணிக்கு உடனடியாக அழைக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதை அனைத்து துறையினரும் உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து வணிக கடைகளும் காலை 9 முதல் இரவு 9 வரை திறந்திருக்கலாம். காய்கறி, பழக்கடைகள் காலை 5 முதல் இரவு 9 வரை திறந்திருக்கலாம்.

தனியார் நிறுவனங்கள் காலை 9 முதல் மாலை 6 வரை செயல்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் ஹோட்டல்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 வரை செயல்படலாம்.  டீக்கடைகள், ஜூஸ் கடைகளும் கொரோனா வழிமுறையை பின்பற்றி இரவு 9 வரை செயல்படலாம். 

அதேபோல் மதுபானக்கடைகள், சாராயக்கடைகள் காலை 9 முதல் இரவு 9 வரை இயங்கலாம். மாநில எல்லைகளில் உள்ள கடைகளில் நெரிசல் ஏற்படாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசாரும், கலால்துறையினரும் மேற்கொள்வார்கள்.  புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குள் மட்டும் மதுபானங்களை டோர் டெலிவரி செய்வதற்கான வழிமுறைகளை கலால்துறை வழங்க வேண்டும்.

அதேபோல் பேருந்துகள், ஆட்டோ, டாக்ஸிகள் இரவு 9 வரை அனைத்து நாட்களிலும் இயங்கலாம். மருத்துவம் சார்ந்த போக்குவரத்துக்கு நாள் முழுக்க தடையில்லை. போக்குவரத்துத்துறையில் வாகன ஓட்டுநர் உரிமம் கொரோனா வழிமுறைப்படி செயல்பட்டு வழங்கும் பணி துவங்கும். அதேபோல் பத்திரப்பதிவுத்துறையும் செயல்படும். அதேபோல் கடற்கரை சாலை, பூங்காக்கள் காலை 5 முதல் 9 வரை நடைப்பயிற்சி செல்வோருக்காக திறக்கப்படும்.

வழிபாட்டு தலங்கள் மாலை 5 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்படும். திருமண நிகழ்வுகளில் 100 பேர் வரை பங்கேற்கலாம். இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் 20 பேர் வரை மட்டுமே பங்கேற்க முடியும். தொழிற்சாலை பணிகள், கட்டுமான பணிகள் நடக்கலாம். அதேபோல் விளையாட்டு தொடர்பான பயிற்சி நிகழ்வுகளுக்கு அனுமதி தரப்படுகிறது. பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. திரைப்படம், தொலைக்காட்சி படப்பிடிப்புகள் நடத்த அனுமதி தரப்படுகிறது. 100 பேருக்குள் கொரோனா வழிமுறையை பின்பற்றி படப்பிடிப்பு நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com