லால்குடி அருகே பிளஸ் 2 மாணவர் கொலை- 2 பேர் கைது

லால்குடி அருகே பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது
கைது
Published on

லால்குடி:

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த செம்பரை கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவர், லால்குடி கிளை சிறையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மூத்த மகன் சரண்தீப்(வயது 17). அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அதே செம்பரை பகுதியை சேர்ந்தவர் பேச்சிமுத்து, அவரது மகன் மணிகண்டன். ராஜாவின் தம்பி நிர்மலும்(28), மணிகண்டனும்(27) சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். அப்போது அங்கு அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிர்மலும், மணிகண்டனும் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். தீபாவளி தினத்தன்று மாலை மதுபோதையில் இருந்த நிர்மலுக்கும், மணிகண்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது சரண்தீப், சித்தப்பா நிர்மலை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வர முயற்சி செய்தார். அப்போது பேச்சிமுத்து மற்றும் அவரது மகன் மணிகண்டன், பேச்சிமுத்து சகோதரி மகன் நிவாஸ், அதே பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி மகன் நிரூபன் ஆகியோர் சேர்ந்து சரண்தீப்பை உருட்டுக்கட்டையால் தலையில் கடுமையாக தாக்கினர். இதில், பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு சரண்தீப் உயிரிழந்தார்.

பின்னர், திருச்சி அரசு மருத்துவமனையில் சரண்தீப்பின் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் அடக்கத்தின்போது அசம்பாவித சம்பவங்களை தடுக்கும்பொருட்டு லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார்(நவல்பட்டு), லால்குடி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர், சரண்தீப் உடல் அவரது தோட்டத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

இதுகுறித்து ராஜா கொடுத்த புகாரின்பேரில், லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமதுஜாபர் வழக்குப்பதிவு செய்து பேச்சிமுத்து, நிவாஸ் ஆகியோரை கைது செய்தார். தலைமறைவாக உள்ள மணிகண்டன், நிரூபன் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com