முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை - கலெக்டர் அறிவிப்பு

மாவட்ட கலெக்டர் அனுமதி பெற்று மரியாதை செலுத்த வரும் தலைவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே வந்து செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை
Published on: 

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலருமான காமாட்சி கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அனைத்துதுறை அலுவலர்கள், சமுதாய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காகவும், 144-ன் கீழ் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதாலும், பொதுமக்களின் நலன் கருதி 28.10.2021 முதல் 30.10.2021 வரை கமுதி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நிகழச்சியில் ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மரியாதை செலுத்த வருவதற்கு அனுமதி இல்லை.

பதிவு பெற்ற அரசியல் கட்சித் தலைவர்கள்,பிரதிநிதிகள் அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் (5 நபர்களுக்கு மிகாமல் மற்றும் 3 வாகனங்களுக்கு மிகாமல்) மாவட்ட கலெக்டர் முன் அனுமதி மற்றும் வாகன முன் அனுமதியை பெற்றும் அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றியும், உரிய சமூக இடைவெளியை கடைபிடித்தும் மரியாதை செய்ய அனுமதிக்கப்படுகிறது.

அனுமதி பெற விரும்பும் அரசியல் கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலெக்டரின் முன் அனுமதி பெற, 18.10.2021 முதல் 24.10.2021 வரை ramanathapuram.nic.in என்ற இணைய தளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்ட கலெக்டர் முன் அனுமதி பெற்று மரியாதை செலுத்த வருபவர்கள் தங்களது சொந்த வாகனங்களில் மட்டும் வர வேண்டும். வாடகை வாகனங்கள், திறந்த வெளி வாகனங்கள் டாடா ஏஸ் , வேன், டிராக்டர், இருசக்கர வாகனங்கள், சைக்கிள் போன்ற வாகனங்களில் வர அனுமதி இல்லை. வாகனத்தின் மேற்கூரையில் பயணம் செய்யக்கூடாது. மரியாதை செலுத்த வரும் வழித்தடங்களில் வெடி போடுவதை கண்டிப்பாக தவிர்ப்பதுடன், ஒலிபெருக்கிகள் ஏதும் பொருத்தி செல்லவோ, சாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டி வரவோ, கோ‌ஷங்களை எழுப்பவோ கூடாது.

மரியாதை செலுத்த அனுமதி பெற்றவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு வந்து செல்வதுடன், வரும் வழியில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் எந்த இடங்களிலும் வாகனங்கள் நிறுத்தக்கூடாது.மாவட்ட கலெக்டர் அனுமதி பெற்று மரியாதை செலுத்த வரும் தலைவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே வந்து செல்ல வேண்டும்.

ஒலிபெருக்கி வைத்தல், வெடி போடுதல், சமுதாய கொடி ஏற்றுதல், கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், விளையாட்டு போட்டிகள் நடத்துதல், ஜோதி ஓட்டம், முளைப்பாரி எடுத்தல், பால்குடம் எடுத்தல், அலங் கார ஊர்தி அணிவகுப்பு, மாட்டு வண்டியில் வருதல், தலைவர்கள் போன்று வேடமணிந்து வருதல் மற்றும் ஊர்வலமாக வருதல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை.

அன்னதானக் கூடம் அமைத்து அமர்ந்து, பரிமாறி சாப்பிடும்போது, சமூக இடைவெளி குறைந்து கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவும் அபாயம் இருப்பதால், அன்னதானக்கூடம் அமைத்து பரிமாறி அன்னதானம் வழங்குவதற்கு அனுமதி இல்லை.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்க அனுமதி இல்லை. மாவட்ட கலெக்டர் அனுமதி பெற்று மரியாதை செலுத்த வருபவர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்கு ஏதுவாக கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடித்து, அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மரியாதை செலுத்த வேண்டும்.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை நிகழச்சியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு கடந்த ஆண்டைப் போன்றே, இவ்வாண்டும் விழா அமைதியான முறையில் நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com