நிலக்கோட்டை அருகே போலீஸ்காரர் வீட்டில் 85 பவுன் நகை கொள்ளை

நிலக்கோட்டை அருகே போலீஸ்காரர் வீட்டில் 85 பவுன் நகை கொள்ளைய டிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நகை கொள்ளை
நகை கொள்ளை
Published on

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மட்டப்பாறையை சேர்ந்தவர் கருப்பையா (வயது67). இவர் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் முன்னாள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது இறந்து விட்டார்.

இவரது மகன் முத்து ரமேஷ் (வயது30). இவர் கொடைரோடு டோல் கேட்டில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் முத்துரமேஷ் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு திண்டுக்கல்லில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டனர்.

இதனால் வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டின் பீரோவில் இருந்த 85 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம், பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர். இன்று அதிகாலை வீடு உடைக்கப்பட்டு இருப்பதை அறிந்த பொதுமக்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக முத்துரமேசுக்கு செல்போன் மூலமாக தகவல் கொடுத்தனர். உடனடியாக தனது வீட்டிற்கு வந்து பார்த்தார். பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளைபோனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து விளாம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். டி.எஸ்.பி. முருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரவிச்சோலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் கைரேகை நிபுணர்களை கொண்டும் சோதனை நடத்தப்பட்டது.

அப்பகுதியில் ஏதேனும் கண்காணிப்பு காமிராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலீஸ்காரர் வீட்டில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com