இங்கிலாந்தின் சிறந்த பேட்ஸ்மேன் ஜோரூட் - நாசர் உசேன் சொல்கிறார்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அனைத்து கால கட்டத்துக்கு ஜோரூட் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்று அந்நாட்டு முன்னாள் கேட்பன் நாசர் உசேன் கூறியுள்ளார்.
நாசர் உசேன் - ஜோரூட்
நாசர் உசேன் - ஜோரூட்
Published on

லண்டன்:

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோரூட் தனது சிறப்பான பேட்டிங் மூலம் தற்போது டெஸ்ட் தர வரிசையில் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

30 வயதான ஜோரூட் சமீபத்தில் இலங்கை பயணத்தின்போது முதல் டெஸ்டில் 228 ரன்னும், 2-வது டெஸ்டில் 186 ரன்னும் குவித்தார். இந்த 2 டெஸ்டிலும் இங்கிலாந்து வெற்றிபெற அவரது பேட்டிங் காரணமாக இருந்தது.

தற்போது இந்திய பயணத்தின்போது சேப்பாக்கத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கு ஜோரூட்டின் அபாரமான பேட்டிங்தான் காரணம். அவர் முதல் இன்னிங்சில் இரட்டை சதம் (218 ரன்) அடித்தார். 2-வது இன்னிங்சில் 40 ரன் அடித்தார்.

இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அனைத்து கால கட்டத்துக்கு ஜோரூட் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்று அந்நாட்டு முன்னாள் கேட்பன் நாசர் உசேன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இங்கிலாந்தின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக ஜோரூட் திகழ்வார் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

அவருக்கு 30 வயதுதான் ஆகிறது. இதனால் இங்கிலாந்தின் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார். டெஸ்டில் அதிக ரன் எடுத்த குக்கின் சாதனையை முறியடிப்பார். நான் பார்த்த வகையில் ஜோரூட்டை போல் எந்தவொரு இங்கிலாந்து வீரரும் சுழற்பந்தை எதிர் கொள்வதில்லை. ஜோரூட் சுழற்பந்தை நேர்த்தியாக எதிர்கொண்டு மிகவும் அபாரமாக விளையாடுகிறார்.

இந்தியாவுக்கு எதிராக 4 டெஸ்டிலும் இங்கிலாந்து தோற்கும் என்று கூறினார்கள். அந்த கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கும் வகையில் ஜோரூட் தலைமையிலான அணி முதல் டெஸ்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

டெஸ்டில் அதிக ரன் எடுத்த இங்கிலாந்து வீரர்களில் ஜோரூட் 3-வது இடத்தில் உள்ளார். அவர் 100 டெஸ்டில் விளையாடி 8,507 ரன் எடுத்துள்ளார். சராசரி 50.33 ஆகும். 20 சதமும் 49 அரை சதமும் அடித்துள்ளார்.

அலஸ்டர் குக் 12,472 ரன்னுடன் (161 டெஸ்ட்) முதல் இடத்திலும், கிரகாம் கூச் 8,900 ரன்னுடன் (118 டெஸ்ட்) 2-வது இடத்திலும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com