குடிபோதையில் தாயை அடித்து உதைத்த மகன் கைது

திருவனந்தபுரம் அருகே குடிபோதையில் தாயை வாலிபர் அடித்து உதைக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால் அவரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் அருகே உள்ள வர்கலா தாலுகாவுக்கு உட்பட்ட எடவா பகுதியை சேர்ந்தவர் ரகீம். பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த ரகீம், சொந்தஊருக்கு திரும்பி வந்துவிட்டார். தற்போது அவர் ஓச்சியூர் பகுதியில் வேலை பார்த்து வருகிறார்.

ரகீமுக்கு ஷாகிதா (வயது49)என்ற மனைவியும், ரகீமா என்ற மகளும், ரபீக்(27) என்ற மகனும் உள்ளனர். ரபீக்கிற்கு திருமணமாகிவிட்டது. அவர் தனது மனைவியுடன் தனியாக வசித்துவருகிறார். அவரது தாய் ஷாகிதாவும், சகோதரி ரகீமாவும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 10-ந்தேதி தாய் வீட்டிற்கு ரபீக் வந்தார். குடிபோதையில் இருந்த அவர் தனது சகோதரியுடன் தகராறு செய்தார். அவரை அவரது தாய் தடுத்தார். இதனால் ஆத்தரமடைந்த ரபீக், தனது தாயை கையால் சரமாரியாக அடித்தும், காலால் எட்டி உதைத்தும் கடுமையாக தாக்கினார்.

அதன்பிறகு அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். தாயை ரபீக் கொடூரமாக தாக்குவதை அவரது சகோதரி தனது செல்போனில் வீடியோ எடுத்தார். அந்த வீடியோ காட்சியை அவர் தனது தந்தை மற்றும் உறவினர்கள் சிலருக்கு அனுப்பிவைத்தார்.

இந்நிலையில் அந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. வயதான தாயை வாலிபர் கொடூரமாக தாக்கும் காட்சி பார்ப்பவர்களை பதை பதைக்க வைத்தது. அதனை பார்த்த வர்கலா போலீசார், விசாரணை நடத்தி தாயை தாக்கும் அந்த வாலிபர் ரபீக் என்பதை கண்டுபிடித்தனர்.

அவரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதனை அறிந்த அவரது தாய் ஷாகிதா போலீஸ் நிலையத்திற்கு சென்றார். ‘தன்னை தாக்கியது தன்னுடைய மகன் தான். எனக்கு அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆகவே அவரை விடுவியுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர் கூறும்போது, ‘என் மகன் தாக்கியது குறித்து எந்த புகாரும் நான் கொடுக்க விரும்பவில்லை. இதற்கு முன் இப்படி என்னை அவன் தாக்கியது இல்லை. அன்றையதினம் அதிகஅளவு மது குடித்து இருந்தான்’ என்றார்.

இந்நிலையில் அந்த வீடியோவின் மூலம் கேரள மாநில மனித உரிமை கமி‌ஷன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ரபீக்கை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com