தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்- சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேச்சு

மக்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்டதாகவும், அதை முடிந்த வரைக்கும் நிவர்த்தி செய்ததாகவும் சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வாசித்து முடித்ததும் தி.மு.க.ஆட்சியின் 100 நாள் சாதனைகளை தோழமை கட்சித் தலைவர்கள் பாராட்டி பேசினார்கள்.

அ.தி.மு.க.வை தவிர பா.ம.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பேசினார்கள்.

இறுதியில் ஏற்புரையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தேர்தலுக்கு முன்பு எனக்கோ, கழகத்துக்கோ இருந்த எதிர்பார்ப்பை விட இந்த 100 நாட்களில் எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகி இருக்கிறது.

தி.மு.க.வுக்கு வாக்களிக்காதவர்கள் கூட இப்போது தேர்தல் நடந்தால் வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள். இந்த அளவுக்கு ஒரு பெயரை பெற்றிருக்கிறோம்.

அந்த பெயரை காலமெல்லாம் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் எனது எண்ணமாக இருந்து கொண்டிருக்கிறது.

முதல் ஒரு மாத காலம் ஆம்புலன்ஸ் சத்தம்தான். அந்த சத்தம் நம்மை நிம்மதியாக இருக்க விடவில்லை. அதையும் தாண்டி மருத்துவமனையில் இடமில்லை. ஆக்சிஜன் பற்றாக்குறை. இப்படி ஏதாவது ஒரு செய்தி வந்து எனது மனதை வாட்டி வதைத்தது.

இதையெல்லாம் சமாளிப்பதற்காகத்தான் உடனடியாக ஒரு வார் ரூமை ஏற்படுத்தினோம். மக்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்டோம். அதை முடிந்த வரைக்கும் நாம் நிவர்த்தி செய்தோம். இன்னும் சொல்ல வேண்டுமானால் கோரிக்கைகளே வராத சூழ்நிலையை இப்போது உருவாக்கி இருக்கிறோம்.

லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியதும் அவர்களுக்கு அரவணைப்பாக இருந்ததும்தான் என்னைப் பொருத்தவரைக்கும் 100 நாளில் நாங்கள் செய்த சாதனையை பெரிய சாதனையாக நான் கருதிக் கொண்டு இருக்கிறேன்.

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரை போல இந்த அரசு நடவடிக்கை எடுத்தது என்று நம்மை பற்றி நம்முடைய வருங்கால தலைமுறை சொல்ல வேண்டும்.

நான் இப்போது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதாக சொல்லி உங்களையும் ஏமாற்றி என்னையும் ஏமாற்றிக் கொள்ள நான் தயாராக இல்லை. படிப்படியாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறோம். நிறைவேற்றுவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதை உறுதியாக நிறைவேற்றுவோம்.

நேற்றைய தினம் முதல் நிதிநிலை அறிக்கையை நம்முடைய நிதி அமைச்சர் தாக்கல் செய்தார். நமது அரசின் 100-வது நாளான இன்று தமிழக வரலாற்றில் பதிவாகக் கூடிய வகையில் நீங்கள் பெருமையோடு சொன்ன அடிப்படையில் வேளாண் துறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து துறைகளுக்கும் தாயுள்ளத்தோடு திட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரி இல்லாத நிதி நிலை அறிக்கை கொடுத்துள்ளோம். இப்போதுதான் தொடங்கி உள்ளோம். படிப்படியாக வாக்குறுதிகளை நிறைவேற்றி காட்டுவோம். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். கலைஞர் இருந்து செய்ய வேண்டியதை அவரது மகன் நிச்சயமாக செய்வான் என்ற உறுதியை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த 100 நாட்களில் 2 மடங்கு உழைப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com