அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தலில் நல்ல தீர்ப்பை மக்கள் தர வேண்டும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வருகிற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக மக்கள் நல்ல தீர்ப்பை தர வேண்டும் என அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
Published on

மதுரை:

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடியில் 3 கோடி ரூபாய் செலவில் புதிய தாலுகா அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகம் அமைய உள்ளது .இதற்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி செந்தில்குமாரி, கோட்டாட்சியர் சவுந்தர்யா, பேரவை மாநில துணை செயலாளர் வெற்றிவேல், நிர்வாகிகள் அய்யப்பன், தமிழ்ச்செல்வம், மகாலிங்கம், ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் அந்தந்த தொகுதிகளில் வட்டாட்சியர் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் கள்ளிக்குடியில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்ட பூமி பூஜை போடப்பட்டுள்ளது. 3 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் இந்த புதிய கட்டிடம் விரைவில் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

இன்னும் சில நாட்களில் சிவரக்கோட்டை பகுதியில் மாமன்னர் மருதுபாண்டியர் சிலை அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிகாரிகள் மின்னல் வேகத்தில் செயல்படுவதால் பொதுமக்களுக்கு தேவையான அரசின் திட்டங்கள் உடனுக்குடன் போய் சேர்கிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு சாமானிய, எளிமையான, எப்போதும் யாரும் அணுகக்கூடிய முதல்வராக திகழ்ந்து வருகிறார். மற்றவர்களைப் போல வாய்ச்சொல் வீரராக இல்லாமல் செயல்வீரராக நமது முதலமைச்சர் இருக்கிறார்.

அவருக்கு 24 மணி நேரம் போதவில்லை. எப்போதும் மக்களை பற்றியே சிந்திக்க கூடிய சிறந்த முதலமைச்சரை நாம் பெற்றுள்ளோம். தினம் தினம் புதுப்புது திட்டங்களை மக்களுக்காக அறிவித்து, செயல்படுத்தி வருகிறார். சொன்னதை செய்து வரும் முதல்வர் சொல்லாததையும் செய்து வருகிறார்.

மக்கள் மீது அக்கறையுடன் எந்த நேரமும் சிந்தித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மக்களின் உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டு பணியாற்றும் மக்கள் பிரதிநிதிகளை அ.தி.மு.க.வில்தான் பார்க்க முடியும். அந்த வகையில் எளிமையான முதலமைச்சர், அமைச்சர்கள், கவுன்சிலர்கள் நமக்கு கிடைத்திருக்கிறார்கள்.

இதனால் மக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டு வருகின்றன. விவசாயக் குடும்பத்தில் பிறந்த முதலமைச்சர் பொங்கல் பண்டிகையை அனைவரும் உற்சாகமாக கொண்டாட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2,500 ரூபாய் வழங்கி வரலாற்று சாதனை படைத்தார்.

இப்போது விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்து, அறிவிப்போடு நின்றுவிடாமல் அதை உடனுக்குடன் செயல்படுத்தும் செயல் வீரரை முதலமைச்சராக நாம் பெற்றுள்ளது நமக்கெல்லாம் பெருமை.

தி.மு.க. ஆட்சியிலும் தைப்பொங்கல் வந்தது. அப்போது ஒரு கருப்பட்டி துண்டாவது அவர்கள் கொடுத்தார்களா? அவர்களுக்கு கொடுக்க எப்போதும் மனம் வராது. எனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வருகிற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக மக்கள் நல்ல தீர்ப்பை தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com