

கோவில்பட்டி:
கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ் திரைத்துறை கடல் போன்றது. இதில் தங்களது வசதிகளுக்கு ஏற்ப அமைப்புகளை ஏற்படுத்தி கொள்கின்றனர். நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் என எந்த சங்கமாக இருந்தாலும் ஜனநாயக முறையில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கங்கள் தான் அங்கீகாரம் பெற்ற சங்கங்களாக இருக்க முடியும்.
திரைத்துறையினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பது தான் அரசின் கருத்து. இது குறித்து பலமுறை நாங்கள் அறிவுறுத்தி உள்ளோம். இதற்கான முயற்சியில் திரைத்துரையினர் ஈடுபட்டுள்ளனர். விரைவில் அனைவரும் ஒன்றாக செயல்படும் சூழ்நிலை தமிழ் திரையுலகில் வரும்.
தி.மு.க.விற்கு பாடம் புகட்ட மக்கள் தயராகி விட்டனர். தமிழகத்திற்கு எந்த திட்டங்கள் வந்தாலும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தடைக்கல்லாக இருக்கிறார். தி.மு.க. ஆட்சியின் போது செய்யாத பணிகளை நாங்கள் செய்து வருகிறோம்.
8 வழிச்சாலைக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதனை சிலர் அரசியலுக்காக தூண்டிவிடுகின்றனர். 8 வழிச்சாலை திட்டத்தினால் மக்கள் பாதிக்கப்படவில்லை. மத்திய அரசு வழங்கிய அற்புதமான திட்டம் 8 வழிச்சாலை திட்டம். இதனால் போக்குவரத்து விரிவடையும். வணிக தொடர்பும் அதிகரிக்கும். தமிழகம் வளர்ச்சி பெறும்.
அ.தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. தலைவர் கூறிய குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. குற்றச்சாட்டுகள் கூறுவது எளிது. அதற்கு ஆதாரம் வேண்டும். தி.மு.க. வை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கம் அ.தி.மு.க.விற்கு கிடையாது. தி.மு.க. தலைவர்கள் அனைவர் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
2021-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுத்தால் தி.மு.க.வினர் அனைவரும் சிறையில் இருப்பார்கள் என்ற பயத்தில் தான் அ.தி.மு.க.வினரை சிறைக்கு அனுப்புவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார்.
தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு, நில அபகரிப்பு எப்படி இருந்தது என்று மக்களுக்கு தெரியும். தி.மு.க.வினர் மண்டல வாரியாக வாரிசுகளை வைத்து ஆட்சி நடத்தினார்கள். அ.தி.மு.க.வில் அது போன்ற நிலை இல்லை. தி.மு.க.வின் இந்த நிலையை மக்கள் மறக்கவில்லை. அப்படிபட்ட நிலைக்கு மீண்டும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.