மதுரையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை - திடுக்கிடும் தகவல்

மதுரையில் பிரபல ரவுடி வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on: 

மதுரை:

மதுரை மகப்பூப்பாளையம் எஸ்.எஸ்.காலனியில் உள்ள கோவில்பிள்ளை காலனியைச் சேர்ந்தவர் பாட்சா (வயது45). ரவுடியான இவர் பிள்ளையார்கோவில் தெருவில் எலக்ட்ரிக்கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று நள்ளிரவு இவர் கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

ஜின்னா திடல் ஆட்டோ நிறுத்தம் அருகே சென்ற போது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை திடீரென பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிவளைத்தது. அவர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாட்சா உயிருக்கு பயந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் அந்த கும்பல் அவரை விரட்டிச் சென்று சரமாரியாக அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் வெட்டியது.

இதில் தலை, உடல் உள்பட 6 இடங்களில் வெட்டுகாயம் அடைந்த பாட்சா ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். சிறிது நேரத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து கொலை வெறி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இதுபற்றி எஸ்.எஸ்.காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாட்சா உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபு ணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

பாட்சாவை கொன்ற கும்பல் யார்? என்று தெரியவில்லை என்ன காரணத்திற்காக இந்த சம்பவம் நடந்தது என்றும் மர்மமாக உள்ளது. இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

கொலையுண்ட பாட்சா பிரபல ரவுடியாக வலம் வந்தது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. இவர் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும், மகப்பூப் பாளையத்தைச் சேர்ந்த மேரி என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. மேரிக்கு ஏற்கனவே திருமணமாகி துரைராஜ் என்ற கணவரும், கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி விட்டது.

இந்த நிலையில் பாட்சா -மேரி கள்ளத்தொடர்பு நீண்ட நாட்களாக நீடித்தது. இதை அறிந்த மகன் கிருஷ்ண மூர்த்தி தாயை கண்டித்தார். பாட்சாவிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் கிருஷ்ண மூர்த்தி மீது கள்ளக்காதலர்கள் ஆத்திரத்தில் இருந்தனர். தங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கிறார் என கருதி பாட்சாவும், மேரியும் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியை தலையணையால் அமுக்கி கொன்றனர். இந்த சம்பவம் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.

அதன் பிறகு 2 பேரும் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தி உடலை துண்டு, துண்டாக வெட்டி உடலை பிரிட்ஜிக்குள் அடைத்தனர். மற்ற பாகங்களை சாக்கடைக்குள் வீசினர். இந்த சம்பவம் அப்போது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை தொடர்பாக போலீசார் பாட்சா- மேரி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் 10 ஆண்டுகள் ஜெயிலில் இருந்த பாட்சாவும், மேரியும் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் விடுதலையாகி வெளியே வந்து எலக்ட்ரிக்கடையை கவனித்து வந்தார்.

இந்த சூழ்நிலையில்தான் பாட்சா நேற்று இரவு மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைக்கு கள்ளக்காதலி மேரிக்கு தொடர்பு இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பாட்சாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே முன்பகை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த பகையால் ஆத்திரம் அடைந்து அவர்களில் யாராவது கூலிப்படையை ஏவி இந்த கொலையை அரங்கேற்றி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர வேட்டை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் பிளவர்ஷீலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மதுரையில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

X