

மதுரை:
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை கடந்த சில மாதங்களாக மக்களை பாடாய்படுத்தி வருகிறது. தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு பலியாகும் நிலை உருவானதால் ஆக்சிஜன் பயன்பாடும் அதிகளவில் தேவைப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையை சமாளிக்க ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளும் அதிகரிக்கப்பட்டன. மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டது.
தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 283 ஆக உள்ளது. 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7800 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சுமார் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மதுரை மாவட்டத்தை பொருத்தவரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 2-வது அலை பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களில் 450-க்கும் மேற்பட்ட இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. அந்த பகுதிகளில் பொதுமக்கள் செல்லாதவாறு தடைகள் ஏற்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினர் தினமும் தீவிரமாக கண்காணித்தனர்.
இந்த நிலையில் கட்டுப்பாட்டு பகுதிகள் நகர்ப்பகுதிகளில் 29 ஆகவும், புறநகர் பகுதிகளில் 47 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 76 இடங்கள் மட்டுமே தற்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் இந்த எண்ணிக்கையும் படிப்படியாக குறையும் என்றும் கூறப்படுகிறது.
இதனால் மதுரை மாவட்டம் கொரோனா 2-வது அலையில் இருந்து படிப்படியாக மீண்டு வருகிறது. வருகிற 14-ந் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தொற்று குறைந்ததன் காரணமாக மதுரைக்கு மேலும் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி டாஸ்மாக், சலூன் கடைகள் வருகிற திங்கள் முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்கள், மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட பெரிய வர்த்தக நிறுவனங்கள் தவிர அனைத்து கடைகளும் நேர கட்டுப்பாடுகளுடன் நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வியாபாரம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதனால் வருகிற 14-ந் தேதி முதல் 21-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டாலும் பல்வேறு தளர்வுகள். காரணமாக மதுரையில் சகஜ நிலை திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளன.
இந்த தளர்வுகளை முறையாக கடைபிடித்தால் மட்டுமே நோய் தொற்றை முழுமையாக தடுக்க முடியும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனவே பொதுமக்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை கவனமாக கையாள வேண்டும். முக கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சானிடைசர் மூலம் சுத்தம் செய்தல், தனிமனித இடைவெளி ஆகியவற்றை எப்போதும் கடைபிடிக்க வேண்டும். அப்போது தான் கொரோனாவில் இருந்து நம்மையும், குடும்பத்தையும் பாதுகாக்க முடியும்.
இதை மனதில் வைத்து தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதையும் தவிர்க்க வேண்டும். கூட்டமாக கூடுதல், நெரிசலில் சென்று பொருட்களை வாங்குதல் உள்ளிட்ட நோய் பரவும் சாத்தியக்கூறுகளை உருவாக்குவதை தவிர்க்கும் வகையில் எந்த நேரமும் கவனமாக செயல்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தி கூறியுள்ளனர்.
ஊரடங்கு தளர்வுகளை காரணம் காட்டி தேவையின்றி சாலைகளில் சுற்றுபவர்களை தொடர்ந்து கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே ஊரடங்கு தளர்வுகளை முறையாக பின்பற்றி அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தால் மட்டுமே மதுரையில் கொரோனா தொற்றை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர முடியும். பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு மதுரை மாவட்டத்தில் இருந்து கொரோனாவை விரட்ட முழு ஒத்துழைப்பை தரவேண்டுமென்று மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும், காவல் துறையும், சுகாதார துறையும் வேண்டுகோள் விடுத்துள்ளது.