திருவாரூர் அருகே லாரி மோதி அக்கா-தம்பி பலி

திருவாரூர் அருகே லாரி மோதிய சம்பவத்தில் பைக்கில் சென்ற கல்லூரி மாணவி மற்றும் அவரது தம்பி இறந்த நிலையில் மற்றொரு கல்லூரி மாணவி சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து
விபத்து
Published on

திருவாரூர்:

திருவாரூர் அருகே குளிக்கரை கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி குமார். இவரது மகள் அபிராமி (21).

இதேபோல் அதே ஊரில் வசித்து வருபவர் மற்றொரு விவசாயி பாலசுப்பிரமணியன். இவரது மகள் சினேகா (21) அபிராமி மற்றும் சினேகா இருவரும் திருவாரூர் அருகே கிடாரங்கொண்டானில் இயங்கிவரும் திரு.விக அரசு கலைக் கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி இறுதி ஆண்டு தேர்வு தாள்களை அஞ்சல் மற்றும் கூரியர் மூலமாக அனுப்பி வைக்குமாறு கல்லூரி நிர்வாகம் மாணவ, மாணவிகளுக்கு தெரிவித்துள்ளது.

இருப்பினும் கல்லூரி அருகே வசிப்பவர்கள் தேர்வுத் தாள்களை நேரடியாக கல்லூரி நிர்வாகத்திடம் வழங்கிவருகின்றனர். இதேபோன்று தேர்வு தாள்களை கல்லூரியில் கொடுப்பதற்காக மேற்படி அபிராமி மற்றும் சினேகா இருவரும் நேற்று கல்லூரிக்கு சென்றுள்ளனர். இவர்கள் இருவரையும் பைக் மூலம் வீட்டிலிருந்து அபிராமியின் தம்பியான முத்துக்குமார் (18) (ஐ.டி.ஐ படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்) கல்லூரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது திருவாரூரை அடுத்த சீனிவாசபுரம் என்ற இடம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வளைவு ஒன்றில் எதிரே வந்த டிரக்கர் லாரி ஒன்று முத்துக்குமார் ஓட்டி சென்ற பைக் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் முத்துக்குமார் மற்றும் அவரது பின்புறத்தில் அமர்ந்திருந்த அக்கா அபிராமி மற்றும் அவரது பின்னால் மூன்றாவதாக அமர்ந்திருந்த சினேகா ஆகிய மூவரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலனின்றி அபிராமி நேற்று இரவும், அவரது தம்பி முத்துக்குமார் இன்று அதிகாலை 3.30 மணியளவிலும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இச்சம்பவம் தொடர்பாக திருவாரூர் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் திருவாரூர் மேட்டு தெருவைச் சேர்ந்த சக்திவேல் (49) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் ஒரே குடும்பத்தில் அக்கா, தம்பி இருவரும் இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com