முக்கடல் அணை பூங்காவில் சிறுத்தை நடமாட்டம்

மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் தான் முக்கடல் அணை உள்ளது. இதனால் இங்கு வனவிலங்குகள் வந்து செல்வது வாடிக்கையாகி விட்டதாக வன ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சி
கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சி
Published on

நாகர்கோவில்:

பூதப்பாண்டி அருகே முக்கடல் அணை உள்ளது. முக்கடல் அணையில் இருந்து நாகர்கோவில் நகர மக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

முக்கடல் அணை பராமரிப்பு பணியை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அணையின் கீழ் பகுதியில் சிறுவர் பூங்கா மற்றும் அறிவியல் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கலையரங்கமும் கட்டப்பட்டுள்ளது.

இந்த பூங்காவில் திருமண போட்டோ ஷூட், சின்னத்திரை, பெரிய திரை படப்பிடிப்புகள் நடத்தும் வசதிகளும் உள்ளது. இதற்கான தனி கட்டணத்தை மாநகராட்சி நிர்ணயம் செய்துள்ளது. பூங்காவிற்கு தற்போது சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முக்கடல் அணையில் மாநகராட்சி ஊழியர் ஒருவர் பணியில் இருந்தார். அப்போது அங்கிருந்த நாய் ஒன்று நீண்ட நேரமாக குரைத்து கொண்டிருந்தது. உடனே பணியில் இருந்த ஊழியர் வந்து பார்த்தார்.

அப்போது சிறுத்தைப்புலி ஒன்று காட்டுக்குள் இருந்து இறங்கி முக்கடல் அணையின் உட்புறத்தில் உள்ள ரோட்டிற்கு வந்துள்ளது. பின்னர் அந்த சிறுத்தைப்புலி தண்ணீர் குடித்து விட்டு மீண்டும் அங்குள்ள பூங்காவிற்குள் சென்றதை ஊழியர் பார்த்துள்ளார்.

இந்த தகவலை அவர் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார். அவர்கள் நேற்று முக்கடல் அணைக்கு சென்று பார்வையிட்டனர். அங்கு இருந்த சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுத்தைப்புலி வந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதையடுத்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை ஊழியர்கள் முக்கடல் அணைக்கு வந்து பார்வையிட்டனர். முக்கடல் அணைக்கு சிறுத்தைப்புலி வந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

முக்கடல் அணை பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஏற்கனவே சிறுத்தைப்புலி ஒன்றின் நடமாட்டம் இருந்தது. அந்த சிறுத்தைப் புலியின் குட்டிதான் தற்போது இங்கு வந்திருக்கலாம் என்று தெரிகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் தான் முக்கடல் அணை உள்ளது. இதனால் இங்கு வனவிலங்குகள் வந்து செல்வது வாடிக்கையாகி விட்டதாக வன ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com