ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் - கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் கட்சியின் 136-வது நிறுவன தினத்தில் அக்கட்சி கொடியை ஏற்றிய கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்றார்.
கொடியேற்ற நிகழ்ச்சியில் கேஎஸ் அழகிரி
கொடியேற்ற நிகழ்ச்சியில் கேஎஸ் அழகிரி
Published on

சென்னை:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 136-வது நிறுவன தினத்தையொட்டி, சென்னை சத்தியமூர்த்திபவனில் 150 அடி உயர கம்பத்தில் காங்கிரஸ் கட்சி கொடியை கே.எஸ்.அழகிரி ஏற்றினார்.

அதன்பின், அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை கவர்னரிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருக்கிறார். இந்த புகார் மீது கவர்னர் உடனடி நடவடிக்கை எடுத்து விசாரணையை தொடங்கவேண்டும்.

தமிழகத்தில் காந்தி, பெரியார், திருவள்ளுவர் சிலைகள் மீது காவிசாயம் பூசும் மோசமான நடவடிக்கையில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. பா.ஜ.க. அலுவலகம் மீது கருப்பு சாயத்தை எங்களால் பூசமுடியாதா? அப்படி பூசினால் என்ன செய்யமுடியும்? ஆனால் அதுபோன்ற தவறான செயல்களில் நாங்கள் ஈடுபடமாட்டோம். எனவே பா.ஜ.க. தலைவர்கள் இதனை கண்டிக்க வேண்டும். இல்லையெனில் பின்விளைவுகள் நிச்சயம் உண்டு.

தி.மு.க. தலைமையிலான எங்கள் கூட்டணியில் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் மதச்சார்பின்மை எனும் நேர்க்கோட்டில் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்கள் கூட்டணியின் வெற்றிக்காக எந்த தியாகத்தையும் செய்ய காங்கிரஸ் தயாராக இருக்கிறது.

ஆட்சியில் பங்கு கேட்கும் உணர்வு எங்களுக்கு இல்லை. எனவே தி.மு.க. தலைமையிலான எங்கள் கூட்டணி எனும் தேர் மிகவும் பலமாக உள்ளது.

ரஜினிகாந்த் அரசியல்வாதி அல்ல. ஆன்மிகவாதியான அவர் அரசியலுக்கு வரமுடியாது. முதல்-அமைச்சராக வர விருப்பமில்லை என கூறி அவர் கட்சி ஆரம்பித்தால், அவர் மீது விருப்பமுள்ளவர்களே அவருக்கு ஓட்டுப்போட மாட்டார்கள். எனவே ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com