கிள்ளியூர் தொகுதியில் ரூ.8 கோடியில் சாலை பணிகள்- ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தகவல்

கிள்ளியூர் சட்டசபை தொகுதியில் சாலை பணிகளுக்காக ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
ராஜேஷ்குமார்
ராஜேஷ்குமார்
Published on

கருங்கல்:

கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினரும், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகள் மிகவும் பழுதடைந்து காணப்பட்டன. இதனை சீரமைக்க வேண்டும் என்று தொகுதி முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பினர் என்னிடம் வலியுறுத்தினர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று கிள்ளியூர் தொகுதியில் பழுதடைந்த சாலைகள், கல்வெட்டுகளை சீரமைக்க வலியுறுத்தி முதல்- அமைச்சர், அரசு முதன்மை செயலாளர்கள், மாவட்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் என அனைத்து தரப்பினரிடமும் மனுக்கள் மூலமாகவும் நேரிலும் தொடர்ந்து சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கி தரும்படி வலியுறுத்தினேன்.

அதன்படி கிள்ளியூர் தொகுதியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது விண்ணூர்- பழஞ்சி சாலையை மேம்படுத்த ரூ.15 லட்சமும், கருங்கல் - குளச்சல் சாலையை மேம்படுத்த ரூ.1 கோடியே 16 லட்சத்து 85 ஆயிரமும், மாங்கரை- பூட்டேற்றி சாலையை சீரமைக்க ரூ.14 லட்சத்து 25 ஆயிரமும், காஞ்சாம்புறம் - வளையசுற்று சாலையை சீரமைக்க ரூ.14 லட்சத்து 25 ஆயிரமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று உதயமார்த்தாண்டம் - கானாவூர் சாலையை சீரமைக்க ரூ.34 லட்சத்து 20 ஆயிரமும், நம்பாளி - கிராத்தூர் சாலையை சீரமைக்க ரூ.30 லட்சத்து 40 ஆயிரமும், வட்டக்கோட்டை - அம்சி சாலையை சீரமைக்க ரூ.25 லட்சத்து 65 ஆயிரமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குஞ்சிருப்புவிளை- மாதாபுரம் சாலையை சீரமைக்க ரூ.16 லட்சத்து 15 ஆயிரமும், குழித்துறை- மடிச்சல் சாலையை சீரமைக்க ரூ.16 லட்சத்து 15 ஆயிரமும், குழித்துறை - மடிச்சல் சாலையை சீரமைக்க ரூ.1 கோடியே 63 லட்சத்து 50 ஆயிரமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் மங்காடு நடைக்காவு சாலையில் கல்வெட்டு அமைத்து சாலையை சீரமைக்க ரூ.7 லட்சத்து 60 ஆயிரமும், முள்ளங்கினாவிளை- தொலையாவட்டம்- கானாஞ்சேரி சாலையில் கல்வெட்டும், மழைநீர் வடிகால் அமைத்து ஓடையை மேம்படுத்தவும் ரூ.26 லட்சத்து 60 ஆயிரமும், குழிவிளை - நம்பாளி சாலையை விரிவாக்கம் செய்து மேம்படுத்த ரூ.1 கோடியே 24 லட்சத்து 45 ஆயிரமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குழிவிளை - நம்பாளி சாலையை சீரமைக்க ரூ.1 கோடியே 10 லட்சத்து 20 ஆயிரமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் கிள்ளியூர் தொகுதியில் ரூ.7 கோடியே 93 லட்சத்து 50 ஆயிரம் சாலைப்பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சாலைகள் அனைத்தும் உடனடியாக பணிகள் தொடங்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com