துணைவேந்தர் சூரப்பாவின் மீதான விசாரணை தொடரும்- விசாரணை ஆணையம் தகவல்

சூரப்பாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில், அவர் ஏற்கனவே கவர்னரிடம் துணைவேந்தர் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று கடிதம் எழுதி இருந்தார்.
சூரப்பா
சூரப்பா
Published on

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சூரப்பா கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமனம் செய்யப்பட்டார். இந்த துணைவேந்தர் பதவிக்கு அப்போது விண்ணப்பித்த 170 பேரில், சூரப்பாவை பல்கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித் தேர்வு செய்திருந்தார்.

இதற்கு அப்போதே பல அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் சூரப்பா, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பணியாற்றினார். பல்கலைக்கழக ரீதியாக தொடர்ந்து பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்பட்டன.

அவர் மீது தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் அவர் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார் என்ற நற்பெயரும் அவருக்கு இன்றளவும் இருக்கிறது. இதற்கிடையில் அவர் மீது ஊழல் புகார் எழுந்ததையடுத்து, அதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை நடத்தி வருகிறார்.

விசாரணை இன்னும் நிறைவு பெறவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் இந்த சூழ்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் 3 ஆண்டு பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடைய பதவி காலம் முடிந்து இருந்தாலும், அவர் மீதான ஊழல் புகார் குறித்த விசாரணை தொடரும் என்று விசாரணையை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார். இன்னும் 10 முதல் 15 நாட்களுக்குள் விசாரணையை முடித்து, அடுத்தகட்ட அறிக்கையை அரசுக்கும் அவர் சமர்ப்பிக்க இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com