காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - மெகபூபா சொல்கிறார்

காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி வலியுறுத்தியுள்ளார்.
மெகபூபா முப்தி
மெகபூபா முப்தி
Published on

ஜம்மு:

கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின், மெகபூபா 14 மாத காலம் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அதிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக ஜம்மு சென்ற மெகபூபா, அங்கு நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

“காஷ்மீரில் பயங்கரவாதம் வேரறுக்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் உண்மையில் இங்கு பயங்கரவாதம் தொடர்ந்து வளர்ந்துவருகிறது. ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் சராசரியாக 10 முதல் 15 இளைஞர்கள் பயங்கரவாத குழுக்களில் இணைந்துவருகிறார்கள்.

சிறைக்கு செல்வதைவிட, பயங்கரவாத பாதையில் துப்பாக்கி தூக்கி, அதனால் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை என்று காஷ்மீர் இளைஞர்கள் நினைக்கிறார்கள். இங்கு, எதிலும் சாராத நடுவழி என்ற ஒன்று இல்லாமலே போய்விட்டது. கருத்துவேறுபாட்டு குரல்கள் கடுமையான அடக்குமுறையால் ஒடுக்கப்படுகின்றன.

மத்தியில் பா.ஜ.க.வின் ஆட்சியின்கீழ் காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரிக்கும் நிலையில், எங்களைப் போன்ற அரசியல்வாதிகள் இங்கு வசிப்பதில் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம்.

எல்லையில் நிலவும் பதற்றமான சூழலால் மக்கள் கவலைப்படுகிறார்கள். எல்லை தாண்டிய இடைவிடாத தாக்குதல்களால் அங்கு உள்ளூர்வாசிகள் எப்போதும் அபாயச் சூழலிலேயே வாழ்கிறார்கள். தங்களின் நிலங்களில்கூட அவர்களால் வேலைபார்க்க முடியவில்லை.

இந்நிலையை மாற்ற, பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். அந்நாடு தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில் அது எப்படி சாத்தியம் என்பவர்கள், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மேற்கொண்ட நடவடிக்கைகளை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.

கார்கில் போர், நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவற்றையும் தாண்டி, வாஜ்பாய் பாகிஸ்தானுடன் நட்புறவை வளர்க்க ஆர்வம் காட்டினார். அதன் விளைவாக, அப்போது காஷ்மீரில் பயங்கரவாதம் குறைந்தது. எல்லை தாண்டிய தாக்குதலும் நின்றது.

பாகிஸ்தானுடனும், ஜம்மு-காஷ்மீரில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் அரசு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். நமது 20 வீரர்களை கொன்ற சீனாவுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தும்போது, பாகிஸ்தானுடன் ஏன் பேசக்கூடாது?

சீனா நமது நூறு சதுர கிலோமீட்டர் பரப்பளவை ஆக்கிரமித்துள்ள நிலையில், ஓரங்குல நிலத்துக்காக அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? வாஜ்பாயை தங்கள் வழிகாட்டியாக கருதும் இந்த அரசாங்கம், அவர் பாதையில் நடக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com