ராமநாதபுரத்தில் ஆசிரியையை கொன்ற கணவன் பரபரப்பு வாக்குமூலம்

ராமநாதபுரத்தில் 2-வது திருமணம் செய்ய திட்டமிட்டதால் ஆசிரியையை கொலை செய்தேன் என்று கைதான கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட சிவபாலா, கைதான சரவணன்.
கொலை செய்யப்பட்ட சிவபாலா, கைதான சரவணன்.
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அருகே உள்ள தென்னம்பிள்ளை வலசையை சேர்ந்தவர் சரவணன் (வயது36), டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரும், ராமநாதபுரத்தை சேர்ந்த சிவபாலா (32) என்பவரும் படிக்கும்போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு அபிமேனா (13), பிரியதர்ஷிணி (11) ஆகிய 2 மகள்களும், லோசித் ராஜன் (4) என்ற மகனும் உள்ளனர்.

சிவபாலா ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். சரவணனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கருத்து வேறுபாடு காரணமாக சிவபாலா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து குழந்தைகளுடன் ராமநாதபுரம் வ.உ.சி நகரில் வசித்து வந்தார்.

மேலும் இவர் விவாகரத்து கேட்டு ராமநாதபுரம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கு விசாரணைக்காக நேற்று சிவபாலா ஆஜராகிவிட்டு, பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த சரவணன், மனைவியை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

திடீரென அவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சிவபாலாவை சரமாரியாக வெட்டினார்.

உயிர் பிழைக்க சிவபாலா ஓடினார். ஆனாலும் சரவணன் விரட்டி சென்று அவரை ஆத்திரம் தீர வெட்டினார். இதில் தலை உள்பட பல்வேறு இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த சிவபாலா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

இதையடுத்து சரவணன் கேணிக்கரை போலீஸ் நிலையத்தில் அரிவாளுடன் சரணடைந்தார். போலீசார் அவரிடம் இருந்து அரிவாளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

கொலையுண்ட சிவபாலா உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சரணடைந்த சரவணன் மனைவியை கொன்றது ஏன்? குறித்து வாக்குமூலம் அளித்தார்.

எனக்கும், மனைவிக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வந்தது. அடிக்கடி சண்டை போட்டு வந்தோம். இதனால் என்னை பிரிந்து குழந்தையுடன் சென்று விட்டார்.

மேலும் விவாகரத்து கேட்டு கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். எனக்கு அதில் விருப்பம் கிடையாது. குழந்தைகளுக்காக நாம் சேர்ந்து வாழவேண்டும் என கூறினேன். நாம் பிரிந்தால் குழந்தைகள் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று மனைவியிடம் பலமுறை கூறினேன். ஆனால் அவர் கேட்கவில்லை.

மேலும் அவரது உறவுக்காரர் ஒருவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். அவரும் திருமணமாகி விவாகரத்தானவர். இதனால் அவரை 2-வது திருமணம் செய்ய சிவபாலா திட்டமிட்டிருந்தார். எனவே எனக்கு ஆத்திரம் ஏற்பட்டு அவரை வெட்டிக் கொன்றேன்.

இவ்வாறு அவர் போலீசில் வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது. கைதான சரவணன் பரமக்குடி சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

எஸ்.பி.அலுவலகம், டி.ஐ.ஜி. அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், நீதிமன்றம் உள்ள பகுதியில் இந்த கொலை பட்டப்பகலில் நடந்தது பொதுமக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் முன்பு இதேபோல் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் இரட்டை கொலை நடந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com