சர்வதேச பயணங்களை எளிதாக்க தடுப்பூசி பாஸ்போர்ட் வந்தாச்சு

எல்லை தாண்டிய பயணத்தை எளிதாக்குவதில், அவர்களின் மருத்துவ பரிசோதனை அறிக்கை மற்றும் தடுப்பூசி போட்ட தகவல்களை ஆவணப்படுத்துவது முக்கியமானதாகும்.
விமான பயணிகள் (கோப்பு படம்)
விமான பயணிகள் (கோப்பு படம்)
Published on

புதுடெல்லி:

உலகளவில் கொரோனா வைரசின் தாக்கம் இன்னும் குறையாமல் நீடிப்பதால் பல்வேறு நாடுகளில் விமானப் பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏர் பப்பிள்ஸ் எனப்படும் இரு தரப்பு ஒப்பந்தம் மூலம், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சில நாடுகள் விமானங்களை இயக்குகின்றன. 

தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு போக்குவரத்து சீரடைந்து வருவதாலும், தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியிருப்பதாலும், சர்வதேச பயணங்கள் மேற்கொள்வோருக்கு புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் கொரொனா தடுப்பூசிகளுக்குத் தயாராகி வரும் நிலையில், எல்லை தாண்டிய பயணத்தை எளிதாக்குவதில், அவர்களின் மருத்துவ பரிசோதனை அறிக்கை மற்றும் தடுப்பூசி போட்ட தகவல்களை ஆவணப்படுத்துவது முக்கியமானதாகும். குறிப்பாக, விமான நிலையங்கள், பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் விரைவில் மக்கள் தங்கள் தடுப்பூசி நிலை தொடர்பான ஆவணத்தை காட்ட வேண்டும். இந்த நடைமுறையை மிகவும் எளிதாக்கும் வகையில், தடுப்பூசி பாஸ்போர்ட் அறிமுகமாகி உள்ளது.

தடுப்பூசி பாஸ்போர்ட் என்றால் என்ன?

தடுப்பூசி பாஸ்போர்ட் என்பது, கையில் எடுத்துச் செல்லும் வகையிலான பாஸ்போர்ட் கிடையாது. டிஜிட்டல் வாலெட்டுகள் போன்றது. தனிநபர்கள் தங்களின் உடல்நிலை சார்ந்த தகவல்கள், மருத்துவ குறிப்புகள் மற்றும் சான்றிதழ்களை சேமித்து வைக்க உதவும் செயலி (ஆப்) ஆகும். பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, அவர்களின் சமீபத்திய கொரோனா பரிசோதனை முடிவு, உடல் வெப்பநிலை ஸ்கேன் மற்றும் தடுப்பூசி செலுத்திய தகவல்களின் விவரங்களை உள்ளீடு செய்யவேண்டும். 

கொடுக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில், பயனர் பயணிக்க பாதுகாப்பானதா என்பதை செயலி குறிப்பிடும். தொடர்பில் உள்ளவர்களை கண்டறிவதற்காக கடந்த ஆண்டு நடைமுறையில் இருந்த செயலிகள் போன்றது இந்த செயலி. சில செயலிகள் பயணிகளின் நிலையைக் குறிக்கும் வகையிலான கியூஆர் குறியீட்டை உருவாக்கலாம். பயனர்கள் கொடுக்கும் உள்ளீடுகளை, சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் சரிபார்க்க வேண்டும்.

தயாரிப்பு நிறுவனங்கள்

காமன் திட்ட அறக்கட்டளையின் காமன்பாஸ், ஐபிஎம் நிறுவனத்தின் டிஜிட்டல் ஹெல்த் பாஸ் மற்றும் சர்வதேச வர்த்தக சபையின் (ஐசிசி) ஏ.ஓ.கே.பாஸ் போன்றவை தற்போது நடைமுறையில் உள்ளன. உலக சுகாதார அமைப்பு, மின்னணு தடுப்பூசி சான்றிதழ் என்ற திட்டத்தை உருவாக்கி வருகிறது. 

பயன்பாடு

லுஃப்தான்சா, விர்ஜின் அட்லாண்டிக் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் ஆகிய விமான நிறுவனங்கள் காமன் பாஸைப் பயன்படுத்துகின்றன. தடுப்பூசி பாஸ்போர்ட் தொழில்நுட்பம் மேலும் முன்னேற்றம் ஏற்படும்போது, அதிகமான நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் அவற்றைப் பயன்படுத்தும்.

பாதுகாப்பு அம்சங்கள்

ஐபிஎம் மற்றும் ஐ.சி.சியின் டிஜிட்டல் பாஸ்போர்ட்டுகள் பிளாக்செயின் என்ற பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் நாணயங்களில் பயன்படுத்தப்படும் அதே அம்சங்கள் இதில் உள்ளன. என்கிரிப்ஷன் எனப்படும் ரகசிய குறியீட்டு எண் அடிப்படையில் இயங்குவதால், இதில் உள்ள தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும். அதேசமயம், இந்த தொழில்நுட்பம் இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது.

பயன்படுத்தும் நாடுகள்

டென்மார்க் மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகள் தடுப்பூசி பாஸ்போர்ட் திட்டத்தை ஏற்றுக்கொண்டு அறிமுகம் செய்துள்ளன. இரு நாடுகளும் இதேபோன்ற தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்களை அறிவித்துள்ளன. 

டென்மார்க்கில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வோருக்கான, பயணக் கட்டுப்பாடுகளை எளிதாக்க கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு, டிஜிட்டல் கொரோனா பாஸ்போர்ட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை நான்கு மாதங்களுக்குள்  வணிகமயமாக்குவதாகவும், அதன்மூலம் தொழில் சார்ந்த பயணங்களுக்கு இதை பயன்படுத்தலாம் என்றும் அந்நாட்டின் நிதி மந்திரி கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com