கப்பலூர் சுங்கச்சாவடியில் அரசு பஸ்கள் திடீர் நிறுத்தம்- டிரைவர்கள் வாக்குவாதம்

கப்பலூர் சுங்கச்சாவடியில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் அடிக்கடி சுங்க கட்டணம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
Published on

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் கப்பலூர் சுங்கச்சாவடி வழியாக தென் மாவட்டங்களுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சுங்கச்சாவடியில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் அடிக்கடி சுங்க கட்டணம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

நேற்றும் சுங்கச்சாவடியை கடக்க முயன்ற அரசு பஸ்களை ஊழியர்கள் நிறுத்தினர். சுங்க கட்டணம் செலுத்தி விட்டு செல்லும்படி அவர்கள் கூறினர்.

ஆனால் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் போக்குவரத்துக் கழக நிர்வாகம் சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை என அறிவுறுத்தி உள்ளதால் கட்டணம் செலுத்த முடியாது என கூறினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அரசு பஸ் டிரைவர்கள் சுங்கச்சாவடி வசூல் மையத்தை மறித்து பஸ்களை நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாதபடி பாதைகளில் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதையடுத்து போக்குவரத்து கழக நிர்வாகிகள் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் தொலைபேசியில் பேசி புதிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதன் பின்னர் அரசு பஸ்கள் அனைத்து நுழைவு வாயில்கள் வழியாகவும் செல்ல அனுமதிக்கப்பட்டது.

பஸ்கள் நிறுத்தப்பட்ட தன் காரணமாக அதில் பயணம் செய்த பயணிகள் மற்றும் மற்ற வாகனங்களில் வந்தவர்களும் கடும் அவதிக்குள்ளானார்கள்.

கப்பலூர் சுங்கச்சாவடியில் தொடரும் மோதல் போக்குகளால் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்படும் வகையில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com