

நாகர்கோவில்:
நாகர்கோவில் கீழமறவன்குடியிருப்பு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன்(வயது 36), தொழிலாளி. இவர், நாகர்கோவிலை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் பழகி வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமியின் வீட்டுக்கு சென்ற கோபால கிருஷ்ணன், அங்கு இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் கோபால கிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி எழில்வேலவன் விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில் கோபால கிருஷ்ணனை குற்றவாளி என அறிவித்து, அவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.