

ஆரல்வாய்மொழி:
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. ஆரல்வாய்மொழி, குமாரபுரம், பழவூர், புதியம்புத்தூர், வடக்கன் குளம் ஆகிய பகுதியில் இருந்து பிச்சிப்பூ கொண்டு வரப்படுகிறது.
சங்கரன் கோவில், கொடைரோடு, மதுரை ,மானா மதுரை, வத்தலக் குண்டு ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகைப்பூ, சேலத்தில் இருந்து அரளி பூவும், பெங்களூர், ஓசூர் பகுதியில் இருந்து மஞ்சள் கிரேந்தி, பட்டர் ரோஸ் ஆகிய ரக பூக்களும், தென்காசி, புளியங்குடி ,அம்பாசமுத்திரம் பகுதியில் இருந்து துளசியும்,
தோவாளை ,ராஜாவூர், மருங்கூர் பகுதியில் இருந்து கோழிப் பூ, மற்றும் பிற ரகங்களும் தோவாளை பூச்சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் கேரள மாநிலத்திற்கு பூக்கள் மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கொரோனா பரவலையடுத்து தமிழக அரசு கோவில்களில் கொடை விழா நடத்தவும் ஆலயத்திருவிழா மற்றும் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதித்தது. இதனால் பூக்கள் வாங்க பொதுமக்கள் இடையே ஆர்வம் குறைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரூ.800க்கு விற்பனை செய்யப்ட்ட மல்லிகைப்பூ பின்னர் -1000க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது மல்லிகைப்பூ நேற்று 1 கிலோ ரூ.170க்கும், இன்று கிலோ ரூ.250-க்கும், பிச்சிப்பூ கிலோ 550க்கும் ,சம்மங்கி ரூ.60க்கும் ரோஜா ரூ.100க்கும் அரளி ரூ.60க்கும் முல்லை பூ ரூ.500க்கும் வாடா மல்லி 40க்கும் விற்பனை ஆனது. தாமரை பூவிலை கடும் விலை வீழச்சி அடைந்துள்ளது. ஒரு தாமரை பூ வெறும் ரூ.3 க்கும் விற்பனை ஆகிறது.
இதனால் மலர் விவசாயிகள் பூ பறிக்க கூட கூலி தொகை கொடுக்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் வருகிற ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் பூக்கள் தோவாளை சந்தைக்கு கொண்டுவர முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகம் பூக்கள் தடையின்று சந்தைக்கு பூக்கள் கொண்டுவர அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.