தமிழக காவல்துறையில் 5 ஆயிரம் போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் இருந்து 5004 காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றி டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
டிஜிபி திரிபாதி
டிஜிபி திரிபாதி
Published on

சென்னை:

தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள காவல் துறையும் தயாராகி வருகிறது. இதையடுத்து ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

உதவி கமி‌ஷனர்கள், துணை ஆணையர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், டி.ஐ.ஜி.க்கள், ஐ.ஜி.க்கள் ஆகியோரும் மாற்றப்பட உள்ளனர்.

இதற்கான பட்டியல் தயாராகி வருகிறது. மாவட்ட மற்றும் மாநகர போலீசை பலப்படுத்தும் வகையில் ஆயுதப்படையில் அதிக எண்ணிக்கையில் போலீசாரை இடம் பெற செய்ய உயர் அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதையடுத்து தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் இருந்து 5004 காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றி டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் இந்த காவலர்கள் அனைவரும் ஆயுதப்படையில் பணியை தொடங்குவார்கள்.

கடந்த 2011-2012-ம் ஆண்டில் இளைஞர் காவல் படை மூலம் காவல் துறையில் சேர்ந்தவர்களும், 2016-ம் ஆண்டு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம் தேர்வு செய்யப்பட்ட காவலர்களும் இதில் அடங்குவர்.

ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி.யின் கீழ் தமிழ்நாடு சிறப்பு காவல் படை செயல்படுகிறது. இந்த படைப்பிரிவில் 12 ஆயிரம் காவலர்கள் உள்ளனர்.

தேர்தல் நேரத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் இடங்களிலும், வன்முறை சம்பவங்கள் ஏற்படும் பகுதிகளிலும், சிறப்பு காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

வி.ஐ.பி. பாதுகாப்பு பணியிலும் சிறப்பு பிரிவு போலீசார் ஈடுபடுகிறார்கள். இதனை கருத்தில் கொண்டே 5 ஆயிரம் காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட உள்ளனர். இதன் மூலம் மாவட்ட மற்றும் மாநகர பகுதிகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும்.

தேர்தல் நேரத்தில் பாதுகாப்பு பணிகளில் இவர்களை கூடுதலாக பயன்படுத்திக்கொள்ள முடியும். இதற்கிடையே தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் 11 ஆயிரம் போலீசாரை புதிதாக தேர்வு செய்வதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இவர்களுக்கான எழுத்து தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இதில் வெற்றி பெறுபவர்கள் உடற்தகுதி தேர்வு மூலமாக காவல் துறை பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com