மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை- ஓய்வுபெற்ற நீதிபதி வெளியிட்டார்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு அறிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் நேற்று வெளியிட்டார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சென்னை:

சென்னையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த ஆய்வு அறிக்கையை ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஹரிபரந்தாமன் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி.தேவசகாயம் காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். இதைத்தொடர்ந்து நீதிபதி ஹரிபரந்தாமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பெரும் சர்ச்சைக்கு ஆளாகியது. பல்வேறு இடங்களில் வாக்கு எண்ணிக்கைகளில் குளறுபடி ஏற்பட்டது. இந்தநிலையில் தேர்தல் குறித்த பிரச்சினைகளை ஆய்வு செய்து, அதுகுறித்த அறிக்கையை தேர்தலுக்கான பிரஜைகள் ஆணையம், பொதுமக்களுக்கு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் முதற்கட்டமாக வாக்குப்பதிவின் செயல்பாடுகள் குறித்த இந்த இடைக்கால ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வு ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் இணைந்து நடத்தப்பட்ட பல்வேறு விவாதங்கள் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு அறிக்கையின் படி, வாக்காளர்களுக்கு, வாக்குச்சீட்டில் ஓட்டு போட்டபோது ஏற்பட்ட நம்பிக்கை, வாக்கு எந்திரங்களில் ஓட்டுபோடும் போதும் வரவேண்டும். ஆனால் தற்போது அந்த நம்பகத்தன்மை வாக்காளர்களுக்கு வரவில்லை.

உலகில் எந்த ஒரு எந்திரத்தையும் ‘ஹேக்’ செய்ய முடியும். இதுவரை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘ஹேக்’ செய்யப்பட்டது கண்டுபிடிக்கவில்லை என்பதற்காக, வரும் காலங்களில் ‘ஹேக்’ செய்ய முடியாது என்பதாகாது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘ஹேக்’ செய்ய வாய்ப்புள்ளது என்றே கருதவேண்டும். எனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் பாதுகாப்பு குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும். வாக்களித்ததை உறுதி செய்யும் எந்திரத்திலும் வாக்குகள் பதிவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன்மூலம் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் தணிக்கை செய்ய முடியும். தேர்தல் ஆணையம் சாதாரண மனிதனுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீது முழு நம்பிக்கை ஏற்பட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com