

சோயா பாலில் லுனாசின் என்ற புரதம் உள்ளது. இந்த புரதம் கொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்கும் என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மூலமாக தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் கூறியதாவது:-
கோவிட்-19 நோயை தோற்றுவிக்கும் வைரசான சார்ஸ்-கோவி2 என்பது ஒரு ஆர்.என்.ஏ. வைரஸ் இந்த வைரசை எதிர்ப்பதற்கான தக்க வைரஸ் மற்றும் எதிர்மருந்துகள் இல்லை. எனவே வைரஸ்கள் உடலுக்குள் பெருகுவதை தடுப்பதற்கான ஒருமுறை மரபியல் இடையீடு செய்வதாகும். மேல் மரபியல் முறையில் இது செய்யப்படலாம்.
நமது அணுக்களில் ஹிஸ்டோன் ‘அசிடைல் டிரான்ஸ் பரேஸ்’ என்னும் என்சைம் உள்ளது. இந்த என்சைமை பயன்படுத்தி தான் வைரஸ் நமது அணுக்களுக்குள் பெருகிறது. இந்த என்சைம் பயன்பாட்டை தடுத்துவிட்டால் வைரஸ் பெருகுவதை பெருமளவில் தடுக்க முடியும். இந்த நடைமுறையை பயன்படுத்தி குறிப்பிட்ட என்சைமை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டன.
சோயா விதைகளில் அதிகமாகவும், கோதுமை, பார்லி, கம்பு ஆகியவற்றில் மிக குறைந்த அளவிலும் உள்ள லுனாசின் என்னும் புரதம், ஹிஸ்டோன் ‘அசிடைல்டிரான்ஸ் பரேஸ்’ என்னும் என்சைம் பயன்பாட்டை தடுக்கும் என்பது முன்பே ஒரு சில ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அதன் பயனாக லுனாசின் என்னும் புரதம் டெங்கு காய்ச்சல் சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கோவிட்-19 நோய்க்காக நடைபெற்ற சோதனை முறையில் கோவிட் நோயாளிகள் சிலருக்கு லுனாசின் வழங்கப்பட்டது. இதில் அவர்களின் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை 3-ல் இருந்து 4 நாட்களுக்கு ‘நெகட்டிவ்’ ஆனது கண்டறியப்பட்டது.
லுனாசின் புரதம் மேலை நாடுகளில் உடல்பருமன் ருமாடாய்ட் ஆர்த்ரட்டிஸ் போன்ற நோய்களுக்கும் புற்றுநோய்க்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த புரதம் அணுக்களுக்கு சேதம் விளைவிக்காதா என்பதை அறிய தமிழ்நாடு டாக்டர்கள் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தால் திசு வளர்ப்பு சோதனைகளும், விலங்கின சோதனைகளும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக உதவியோடு செய்யப்பட்டன.
இந்த சோதனையில் விலங்கின திசுக்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு திசுக்களுக்கும், அணுக்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. எனவே லுனாசின் புரதம் உள்ள சோயா விதை பால் சாப்பிட்டால் கொரோனா தொற்றை ஏற்படுத்தும் சார்ஸ் கோவி2 வைரஸ் பாதிப்பை குறைக்கலாம்.