ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதால் தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் கடைகள் திறக்க அனுமதி

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
கடைகள் திறக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.
கடைகள் திறக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.
Published on

ஊட்டி:

இயற்கை எழில் கொஞ்சும் மலை மாவட்டமான நீலகிரியில் பார்த்து மகிழ பல இடங்கள் உள்ளன. அதிலும் இங்குள்ள தொட்டபெட்டா மலை சிகரம் சிறந்த சுற்றுலா மையமாக திகழ்கிறது. இதனால் இங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

இங்குள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் இருந்து மேல் பகுதிக்கு செல்லும் நடைபாதையின் வலது புறத்தில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கொரோனா காரணமாக சுற்றுலா மையங்கள் மூடப்பட்டதால், இந்த கடைகளும் மூடப்பட்டன.

ஊரடங்கு தளர்வு காரணமாக தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களும் திறக்கப்பட்டு உள்ளன. அதுபோன்று நடைபாதை கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. தொட்ட பெட்டா மலை சிகரத்தில் உள்ள நடைபாதை வனத்துறைக்கு சொந்தமானது என்பதால் கடைகளை திறப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதில், சில நிபந்தனைகளுடன் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து வியாபாரிகள் கடைகளை திறந்து உள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு தொட்டபெட்டாவில் நடைபாதையில் உள்ள கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஒரே இடத்தில் கண்டிப்பாக கடைகளை போடக்கூடாது. நகர்வு கடைகள் மட்டுமே செயல்பட வேண்டும். ஒரே இடத்தில் நிற்காமல் வியாபாரம் செய்ய வேண்டும்.

ஒரே இடத்தில் கடைகளை போடும் பட்சத்தில் அங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் குவிந்து விடும். இதைதடுக்கதான் இந்த நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. ஒரே இடத்தில் கடைகளை போட்டு இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் உள்ள தொலைநோக்கி இல்லத்தில் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க நவீன தொலைநோக்கிகள் உள்ளன. சுற்றுலா பயணிகள் அதனை அடிக்கடி தொடுவதால் கொரோனா பரவ வாய்ப்பு இருக்கிறது.

இதை கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகள் தொலைநோக்கி வழியாக பார்க்க அனுமதி இல்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com