திண்டுக்கல்லில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - பெண் உள்பட 16 பேர் கைது

திண்டுக்கல்லில், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி ஊர்வலம் சென்ற பெண் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்த படம்.
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்த படம்.
Published on

திண்டுக்கல்:

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந் தது. இதற்கு தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் திருசித்தன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் தமிழ்வளவன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சவரியம்மாள், கிறிஸ்தவ சமூக நீதி பேரவை மாவட்ட துணை செயலாளர் கர்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நில உரிமை மீட்பு இயக்க மாநில துணை செயலாளர் உலகநம்பி கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் வேளாண் சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும், வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங் கள் எழுப்பப்பட்டன. மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் திண்டுக்கல் மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோஷமிட்டனர். இதில் தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்தமிழன், நகர துணை செயலாளர் ஆனந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (லெனினிஸ்டு) கட்சியின் மாவட்ட செயலாளர் பொன்னுத்துரை தலைமையில் அக்கட்சியினர் திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக பஸ் நிலையம் நோக்கி வந்தனர். அப்போது வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தகவலறிந்து அங்கு வந்த நகர் வடக்கு போலீசார் அனுமதியின்றி ஊர்வலம் செல்லக்கூடாது. எனவே கலைந்து சென்றுவிடுங்கள் என்று தெரிவித்தனர். ஆனால் அதனை ஏற்காத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (லெனினிஸ்டு) கட்சியினர் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து அனுமதியின்றி ஊர்வலம் சென்றதாக அக்கட்சியை சேர்ந்த பெண் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com