கருப்பூர், சங்ககிரி, மேட்டுப்பட்டி சுங்கசாவடிகளில் பாஸ்டேக் கட்டண முறை நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்தது

சேலம் மாவட்டத்தில் கருப்பூர் சுங்க சாவடி உள்பட அனைத்து சுங்க சாவடிகளிலும் பாஸ்டேக் முறை அமுல்படுத்தப்பட்டது.
சுங்கசாவடி
சுங்கசாவடி
Published on

சேலம்:

சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்து நிற்காமல் பயணம் செய்ய வசதியாக பாஸ்டேக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

குறிப்பிட்ட தொகை செலுத்தி பாஸ்டேக்கை பெற்று வாகனங்களில் ஒட்டி கொண்டால் சுங்க சாவடிகளை கடக்கும் போது மின்னணு கருவி மூலம் அந்த வாகனத்திற்கான கட்டணம் தானியங்கி முறையில் பிடித்தம் செய்யப்படும்.

இந்த முறைக்கு வாகன உரிமையாளர்கள் மாறுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் பல்வேறு கட்டங்களாக நீட்டிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் பாஸ்டேக் முறை கட்டாயம் எனவும் பாஸ்டேக் பயன்படுத்தாத வாகனங்களுக்கு 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதனை தவிர்ப்பதற்காக காலை முதல் சுங்கச்சாவடிகள், பெட்ரோல் நிலையங்கள் உள்பட பல இடங்களில் பாஸ்டேக் வாங்க வாகன ஓட்டிகள் குவிந்தனர்.

இதற்கிடையே நேற்று நள்ளிரவு முதல் சேலம் மாவட்டத்தில் கருப்பூர் சுங்க சாவடி உள்பட அனைத்து சுங்க சாவடிகளிலும் பாஸ்டேக் முறை அமுல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பாஸ்டேக் இல்லாதவர்களுக்கு 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளுக்கும், சுங்க சாவடி ஊழியர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதே நிலை தான் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுங்க சாவடியிலும் காணப்பட்டது.

பெரும்பாலான சுங்க சாவடிகளில் பாஸ்டேக் இல்லாதவர்கள் பணம் செலுத்தி செல்வதற்கு ஒரு பாதை மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதனால் அந்த பாதையில் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.

இதே போல சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி, சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் சுங்கச்சாவடி, நாமக்கல் சுங்கச்சாவடிகளிலும் பாஸ்டேக் ஓட்டாத வாகனங்கள் நீண்ட தூரம் காத்து நின்றன.

இது குறித்து சுங்கசாவடி அதிகாரிகள் கூறுகையில், நீண்ட தூரம் செல்லும் வாகனங்களில் 90 சதவீத வாகனங்கள் பாஸ்டேக் பெற்றுள்ளன. குறிப்பாக டோல்கேட் அருகில் உள்ள ஓமலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வாகனங்கள் குறைந்த கட்டணத்தில் டோல்கேட்டை கடந்து சென்று வந்தன. தற்போது பாஸ்டேக் அமுலானதால் அவர்களும் பல மடங்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டி உள்ளதால் அவர்கள் பாஸ்டேக் வாங்க தயக்கம் காட்டி வருகிறார்கள். விரைவில் அனைவரும் பாஸ்டேக் வாங்கி பயன்படுத்துவார்கள் என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com