கொரோனா பாதித்த பிசியோதெரபி டாக்டர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

சின்னாளபட்டி அருகே கொரோனா பாதித்த பிசியோதெரபி டாக்டர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
சின்னுசாமி
சின்னுசாமி
Published on

சின்னாளபட்டி:

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை சேர்ந்தவர் சின்னுசாமி (வயது 44). இவர் பெங்களூருவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பிசியோதெரபி டாக்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி உமாவதி, காந்திகிராம பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராக பணியாற்றுகிறார். இவர்களுக்கு 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் இருக்கிறான். உமாவதியின் சொந்த ஊரான செம்பட்டி அருகே உள்ள மல்லையாபுரத்தில் அவர்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

இதனிடையே பெங்களூருவில் பணியாற்றி வந்த சின்னுசாமி, நேற்று முன்தினம் தான் கொரோனா தொற்றால் பாதித்து உள்ளதாகவும், அதனால் வீட்டுக்கு புறப்பட்டு வருவதாகவும் தனது மனைவிக்கு செல்போனில் கூறியுள்ளார். இதனால் உமாவதி, கணவரின் வருகைக்காக காத்திருந்தார்.

இந்தநிலையில் பெங்களூருவில் இருந்து மோட்டார்சைக்கிளில் சின்னுசாமி நேற்று காலை சின்னாளபட்டி அருகே உள்ள செட்டியபட்டிக்கு வந்தார். பின்னர் அவர் வீட்டுக்கு செல்லாமல் அங்குள்ள ரெயில்வே கேட் அருகே மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு தனது குடும்பத்தினருக்கு உருக்கமாக ஒரு கடிதம் எழுதினார். இதையடுத்து அவர் மோட்டார்சைக்கிளில் தனது செல்போனையும், அதன்கீழ் கடிதத்தையும் வைத்து விட்டு அந்த வழியாக சென்ற ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்தநிலையில் ரெயில் தண்டவாளத்தில் ஒருவர் பிணமாக கிடப்பதாக திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சின்னுசாமியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சின்னுசாமி எழுதி வைத்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் சின்னுசாமி, என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். இதனால் எனது உடலும், மனமும் சோர்வடைந்து விட்டது. எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என ஆங்கிலத்திலும் அதன் கீழே தமிழிலும் உருக்கமாக எழுதி இருந்தார்.

இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com