

கோவை:
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக கோவை மாவட்டம் தொற்றிலும், உயிர் பலியிலும் மாநிலத்தில் முதல் இடத்தில் இருந்தது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதன்காரணமாக மாவட்டத்தில் கொரோனா தொற்று மற்றும் உயிர் பலி படிப்படியாக குறைய தொடங்கியது.
நேற்று சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கோவை மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிர் பலி இல்லை என்பது தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு கடந்த மார்ச் 4-ந்தேதி யாரும் பலியாகவில்லை. அதன் பின்னர் தொடர்ந்து மாவட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரித்தது. 4 மாதங்களுக்கு பின் நேற்று உயிரிழப்பு ஏற்படாததால் சுகாதாரத்துறையினர் மகிழ்ச்சியடைந்தனர்.
மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நேற்று ஒரே நாளில் 290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 25 ஆயிரத்து 334 ஆக அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 392 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.
இதனால் மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 19 ஆயிரத்து 322 ஆக உயர்ந்தது. நேற்று யாரும் பலியாகவில்லை. இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 2,107 ஆக உள்ளது. தற்போது கொரோனா தொற்று காரணமாக 3,905 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.