கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் அலட்சியத்தால் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

கோவையில் மீண்டும் கொரோனா வேகம் எடுக்க தொடங்கி உள்ளதால் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

கோவை:

கோவை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அப்போது தினசரி பாதிப்பு 40 முதல் 50 ஆக இருந்தது.

இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

14-ந் தேதி பாதிப்பு 58 ஆகவும், நேற்று முன்தினம் பாதிப்பு 70 ஆகவும் இருந்தது. நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. இவர்களையும் சேர்த்து மாவட்டத்தில் மொத்தம் 56, 624 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

மீண்டும் கொரோனா வேகம் எடுக்க தொடங்கி உள்ளதால் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்புக்குள்ளவானர்களின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு 448 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

கோவை மாநகரில் துடியலூர், சரவணம்பட்டி, சாய்பாபா காலனி, கணபதி, சவரிபாளையம், பீளமேடு, சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. ஒரே பகுதியில் 3-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி கோவை மாநகராட்சியில் 5 கட்டுப்பாட்டு மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

கொரோனா பரவல் அதிகரிக்க மக்களின் அலட்சியமே முக்கிய காரணம். இதே நிலை நீடித்தால் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மூன்று இலக்கமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறியதாவது:-

பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது போல் தமிழகத்திலும் அதிகரித்துள்ளது. மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் அலட்சியமாக உள்ளனர்.

வெளியூர்களுக்கு சென்று வருபவர்கள் மூலமே நோய் தொற்று பரவல் அதிகமாக காணப்படுகிறது. நோய் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் பரிசோதனைகளும் அதிகப்படுத்தப்பட்டு நாளொன்றுக்கு 3,700 பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

வீடுகளில் இருந்து வெளியேறும் மக்கள் முக கவசம் இல்லாமல் வெளியேறுவதை தவிர்க்க வேண்டும். தேவையற்ற வெளியூர் பயணங்கள், சுற்றுலாக்களை தவிர்க்க வேண்டும். காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும். பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com