புதிய உச்சமாக கோவையில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று

கோவையில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 2 பெண்கள் உள்பட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 713 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Published on

கோவை:

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே நோய் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று முன்தினம் 889 பேருக்கு தொற்று உறுதியானது. இதுதான் மாவட்டத்தின் புதிய உச்சமாக இருந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை சுகாதாரத்துறை வெளியிட்ட பட்டியலில் கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் புதிய உச்சமாக 1004 பேருக்கு தொற்று உறுதியானது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலின் போது கூட இந்த அளவுக்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வந்தது இல்லை. ஆனால் இந்த ஆண்டு 2-வது அலையில் மிகவும் வேகமாக கொரோனா தொற்று பரவி வருவது கோவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று ஒரே நாளில் 1004 பேர் பாதிக்கப்பட்டதை அடுத்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 72 ஆயிரத்து 174 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 403 பேர் குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து எண்ணிக்கை 65 ஆயிரத்து 24 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கோவை இ.எஸ்.ஐ., அரசு ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 6 ஆயிரத்து 437 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கோவையில் நேற்று ஒரே நாளில் 2 பெண்கள் உள்பட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 713 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை அடுத்து முதல் முறையாக கோவையில் ஒரே நாளில் ஆயிரம் பேருக்கு மேல் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் அலட்சியமாக இருக்க கூடாது. கட்டாயம் அரசின் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com