

விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 14,962 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 110 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 14,761 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 91 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று 150-க்கும் மேற்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளிவந்தது. இதில் 8 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,970 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நோய் பாதிப்பிலிருந்து நேற்று ஒரே நாளில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனிடையே லண்டனில் புதிய வகை வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில் கடந்த வாரம் லண்டனில் இருந்து விழுப்புரம் மாவட்டம் காணை, ஆரோவில், வானூர், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 12 பேர் சொந்த ஊருக்கு வந்ததையடுத்து அவர்கள் 12 பேரும் 14 நாட்கள் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.
மேலும் அவர்கள் உள்ளிட்ட அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் என 18 பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அனைவருக்கும் தொற்று இல்லை என்று தெரியவந்தது.
மேலும் கடந்த 27-ந் தேதி லண்டனில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, வானூர் பகுதியை சேர்ந்த தலா ஒருவர் என 3 பேர் சொந்த ஊருக்கு வந்தனர். இதையறிந்த சுகாதாரத்துறையினர், அந்த 3 பேரையும் தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் 2 பேருடைய பரிசோதனை முடிவுகள் வந்ததில் அவர்கள் இருவருக்கும் நோய் தொற்று இல்லை என்றும், இன்னும் ஒருவரின் பரிசோதனை முடிவு கிடைக்கப்பெறவில்லை என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.