கொரோனா பாதிப்பு நீங்க வேண்டி கொரோனா தேவி சிலை அமைத்து வழிபாடு

பழமை வாய்ந்த கிராமங்களில் மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் இருப்பது போல், இனி வரும் காலங்களில் கொரோனா தேவி வழிபாடு அவசியமாகிறது.
கோவையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தேவி சிலை
கோவையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தேவி சிலை
Published on

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமாக உள்ளது. நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பால் ஆஸ்பத்திரிகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. பல இடங்களில் ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் இல்லாமல் கொரோனா நோயாளிகள் ஆம்புலன்சிலேயே காத்திருக்க வேண்டிய நிலை கூட உள்ளது.

காலரா, அம்மை போன்ற நோய்கள் பரவியபோது மக்கள் மாரியம்மன், பிளேக் மாரியம்மன் என்ற தெய்வ வழிபாட்டை உருவாக்கி வழிபட்டனர்.

தற்போது கொரோனா வேகமாக பரவி வரும் இந்த நேரத்தில் மக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கவும், தொற்றின் வேகம் குறையவும் வேண்டி கோவையில் கொரோனா தேவி சிலை அமைக்கப்ப்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

கோவை இருகூர் பகுதியில் காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் வளாகம் உள்ளது. இங்கு காமாட்சி புரி ஆதீனம் சார்பில் கொரோனா தேவி சிலை அமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து 48 நாட்கள் யாகமும் நடந்து வருகிறது.

இந்த பிரதிஷ்டை விழா மற்றும் யாக நிகழ்ச்சிகள் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதியில்லை. கோவிலில் உள்ள பணியாளர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
இதுகுறித்து காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் கூறியதாவது:-

தற்போது பரவி வரும் கொரோனா எனும் பெருந்தொற்று மனித வாழ்க்கையை முற்றிலும் சீர்குலைத்து விட்டது. கடந்த காலங்களில் அம்மை நோய், காலரா நோய் ஏற்பட்ட போது மக்கள் பல உயிர்களை இழந்தனர். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்ற வாக்கின்படி பல கிராமங்களில் மாரியம்மன், மாகாளியம்மன், பிளேக் மாரியம்மன் என்ற வழிபாட்டினை ஏற்படுத்தினர். இதுதவிர வேப்பிலை கும்பங்களும், நடுகற்களும் வைக்கப்பட்டு வழிபட்ட இடம், பிற்காலத்தில் கோவில்களாக மாறியது.

இதற்காக எழுதப்பட்ட சாஸ்திரங்கள் எதுவும் இல்லாவிட்டாலும், இது மக்கள் ஏற்படுத்திய வழிபாடாகும்.

அதுபோல தற்போது கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை கண்டு பயப்படாமல் திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்ற நோக்கி கருங்கல்லில் கொரோனா தேவி சிலை வடிவமைத்தோம். தற்போது அதனை காமாட்சிபுரி ஆதீனத்தில் பிரதிஷ்டை செய்து 48 நாட்கள் யாக பூஜைகள் நடத்த உள்ளோம். இந்த யாகத்தில் மக்கள் யாரும் பங்கேற்க அனுமதி இல்லை. கோவில் பணியாளர்களை கொண்டு 48 நாட்களும் யாக பூஜைகள் நடக்க உள்ளது. பழமை வாய்ந்த கிராமங்களில் மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் இருப்பது போல், இனி வரும் காலங்களில் கொரோனா தேவி வழிபாடு அவசியமாகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com