கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் 6 மாடிகளுடன் புதிய டவர் பிளாக் கட்டிடம்- எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் 6 மாடிகளுடன் ரூ.135 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள டவர் பிளாக் கட்டிடத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நகர்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்காக, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகவை நிதி உதவியுடன் ரூ.1,634 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு நகர் புற சுகாதாரத் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு ஜூலை மாதம் அன்று தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ், சென்னை கீழ்ப்பாக்கம், மதுரை, கோயம்புத்தூர், சேலம், வேலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, புதுக் கோட்டை, திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள்,

ஈரோடு, கடலூர் மற்றும் பெரியகுளம் ஆகிய 3 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், ஆவடி, சேலம் அம்மாபேட்டை, திருப்பூர் வேலம்பாளையம் மற்றும் திருநெல்வேலி, கண்டியப்பேரி ஆகிய இடங்களில் உள்ள 4 இரண்டாம் நிலை மருத்துவமனைகள் வலுப்படுத்தப்படுகிறது.

அந்தவகையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் 2,68,817 சதுர அடிபரப்பளவில் தரை தளம் மற்றும் 6 தளங்களுடன் ரூ.135 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள டவர் பிளாக் கட்டிடத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இக்கட்டிடத்தில், 12 அறுவை அரங்கங்கள் மற்றும் ஒரு ஹைப்ரிட் அறுவை அரங்கம், நரம்பியல், இதயம், எஸ்.ஜி.இ, சிறுநீரகம், மாற்று அறுவை சிகிச்சை, எலும்பியல், பொது அறுவை சிகிச்சை, தீக்காயங்கள் மற்றும் நரம்பியலுக்கான ஹைப்ரிட் அறுவை அரங்கங்களைக் கொண்ட மேம்பட்ட அறுவை அரங்கவளாகம், தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பராமரிப்பு பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பிந்தையமயக்க தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சை பிரிவு, நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் தீக்காய தீவிர சிகிச்சைப் பிரிவு, இமேஜிங் மையம், அவசர சிகிச்சை பிரிவு மற்றும் சி.எஸ்.எஸ்.டி சேவைகள், புனரமைப்பு அறுவை சிகிச்சை வார்டு, எண்டோஸ் கோபி சூட், அல்ட்ரா சவுண்ட் ஆய்வகம் மற்றும் நச்சு சிகிச்சைப் பிரிவு, தீக்காயப் பிரிவு, அறுவை சிகிச்சைபிரிவு, இருதய பிரிவு, நெப்ராலஜி பிரிவு, சிறுநீரக பிரிவு, டயாலிசிஸ், சி.ஆர்.ஆர்.டி. ஆகிய பிரிவுகள் செயல்படும். இக்கட்டிடத்தில் 410 படுக்கைகள் நிறுவப்படும்.

இதேபோல் மதுரை, ராஜாஜி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 2,43,061 சதுர அடிபரப்பளவில் தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் ரூ.121 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள டவர் பிளாக் கட்டிடத்திற்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் 2,22,305 சதுர அடி பரப்பளவில் தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் ரூ.110 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள டவர் பிளாக் கட்டிடத்திற்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார் .

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அரசுமருத்துவமனையில் ரூ.5 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள 48 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சைபிரிவு, தீவிரமருத்துவ சிகிச்சைப் பிரிவு,நச்சு முறிவு சிகிச்சை மையம், கண் அறுவை சிகிச்சைஅரங்கம் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்புப் பிரிவு ஆகிய பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

ராமாநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.5 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள அவசர சிகிச்சைப்பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கம், 30 படுக்கைகள் கொண்ட வார்டு, ஆய்வகம், ரத்த சுத்திகரிப்புபிரிவு, என மொத்தம் ரூ.10 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனைக் கட்டிடங்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com