

வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு-மதுரை சாலையில் பள்ளி வளாகத்தில் தேவாலயம் உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை மாலை சிறப்பு வழிபாடும், அதனைதொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை பகல் பொழுதில் வழிபாடு நடைபெறுவது வழக்கம். அன்று அந்த வாரம் உண்டியலில் போடப்பட்ட பணத்தை எடுத்து நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர்.
அதன்படி நேற்று சிறப்பு வழிபாடு முடிந்ததும் தேவாலயத்தை மூடிச்சென்றனர். நள்ளிரவு நேரத்தில் காம்பவுண்டு சுவர் ஏறிகுதித்த மர்மநபர் பின்பக்கம் இருந்த கண்காணிப்பு கேமிராவின் வயரை துண்டித்தார். மேலும் கதவை திறக்க முடியாததால் மேற்கூரையில் உள்ள கண்ணாடியை உடைத்து உள்ளே புகுந்தார்.
அங்கிருந்த பீரோவில் பணம் இருக்கிறதா என தேடிப்பார்த்தார். எதுவும் கிடைக்கவில்லை. இதனைதொடர்ந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இன்று காலை கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தேவாலய நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது பொருட்கள் சிதறிகிடந்தன. மேலும் உண்டியலில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு வளாகத்திலேயே உண்டியலை போட்டுவிட்டு சென்றதும் தெரியவந்தது. வத்தலக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமிராவின் ஒரு பகுதியை மட்டும் கொள்ளையன் துண்டித்துள்ளார்.
மீதமுள்ள 5 கேமிராவில் அவரது உருவம் பதிவாகி உள்ளது. எனவே அதனை வைத்து விசாரித்து வருகின்றனர். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் உண்டியல் பணம் எடுக்கப்படுவது நன்கு தெரிந்த நபர்தான் நேற்று கைவரிசையை காட்டியிருக்ககூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே விரைவில் அவர் பிடிபடுவார் என போலீசார் தெரிவித்தனர்.