புரெவி புயல் சேதங்களை பார்வையிடும் மத்திய குழு- 3 மாவட்டங்களில் இன்று சுற்றுப்பயணம்

தமிழகத்தில் புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடுவதற்காக வந்துள்ள மத்திய குழுவினர் இன்று ராமநாதபுரம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றனர்.
மழை நீரில் மூழ்கிய பயிர்கள்
மழை நீரில் மூழ்கிய பயிர்கள்
Published on

சென்னை:

புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட மத்திய குழுவினர் நேற்று தமிழகத்திற்கு வந்தனர். மதுரை விமான நிலையத்தில் நேற்று பிற்பகல் வந்திறங்கிய அவர்கள், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்திற்கு புறப்பட்டு சென்றனர். தமிழக அரசின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசிய அவர்கள், இரவில் ராமேசுவரத்தில் தங்கினர்.

இன்று காலை 8.30 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், மண்டபம் ஆகிய இடங்களில் புயலினால் பாதிக்கப்பட்ட படகுகளை பார்வையிடுகின்றனர்.

பின்னர் அங்கிருந்து காலை 9.30 மணிக்கு புதுக்கோட்டை ஆலங்குடிக்கு புறப்படுகின்றனர். அங்கு பாதிக்கப்பட்ட பயிர்களை மதியம் 12 மணிக்கு பார்வையிடுகின்றனர். 12.30 மணிக்கு தஞ்சாவூருக்கு அவர்கள் சென்று அங்கு மதிய உணவு சாப்பிடுகின்றனர்.

பின்னர் அங்கிருந்து பிற்பகல் 2 மணிக்கு மத்திய குழுவினர், புதிய மாவட்டமாக உதயமான மயிலாடுதுறைக்கு செல்கின்றனர். மயிலாடுதுறை, கொள்ளிடம், ஆகிய இடங்களில் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பயிர்கள், குடிசைகளை மாலை 4 மணி முதல் 5.30 மணிவரை பார்வையிடுகின்றனர்.

அதன் பிறகு கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்குச் செல்லும் மத்திய குழுவினர், மாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணிவரை சேதமடைந்த பயிர்களை பார்வையிடுகின்றனர். பின்னர் நாகப்பட்டினத்திற்கு வந்து அங்கு இரவில் தங்குகின்றனர்.

நாளை (புதன்கிழமை) காலை 8.30 மணிக்கு நாகை மாவட்டம் கீழையூர், கீழ்வேளூர் ஆகிய இடங்களுக்கு புறப்படுகின்றனர். அங்கு காலை 10.30 மணிவரை புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்க்கின்றனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு செல்கின்றனர். அங்குள்ள திருத்துரைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் ஆகிய இடங்களிலும், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டிலும் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிடுகின்றனர்.

பிற்பகல் 3 மணிக்கு தஞ்சாவூரில் மதிய உணவு சாப்பிடும் அவர்கள் அங்கிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு திருச்சியை மாலை 5.30 மணிக்கு வந்தடைகின்றனர். திருச்சியில் இருந்து டெல்லிக்கு இரவு 7.30 மணிக்கு புறப்படுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com