அம்மா மருந்தகங்கள் மூடப்படவில்லை- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு பதில்

தமிழகத்தில் கூடுதலாக 75 அம்மா மருந்தகங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், ஏற்கனவே இயங்கிவந்த எதுவும் மூடப்படவில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அம்மா மருந்தகம்
அம்மா மருந்தகம்
Published on

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஏ.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கூட்டுறவு சங்கங்களின் மூலம் தமிழ்நாடு அரசு 131 அம்மா மருந்தகங்களையும், 174 கூட்டுறவு மருந்தகங்களையும் ஆக மொத்தம் 305 மருந்தகங்களை நடத்திவருகிறது. இந்த அரசு பொறுப்பேற்றவுடன் ஏற்கனவே இயங்கி வந்த அம்மா மருந்தகங்கள் எதுவும் மூடப்படவில்லை. மாறாக, அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு உணர்ந்ததனாலேயே அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் கூட்டுறவு மருந்தகங்களின் எண்ணிக்கையும் ஆண்டொன்றுக்கு 60 புதிய மருந்தகங்கள் என்கிற அடிப்படையில் அடுத்த 5 ஆண்டுகளில் 300 புதிய கூட்டுறவு மருந்தகங்களை புதிதாக துவக்குவதற்கு கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதல்-அமைச்சரால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நடப்பு வருடத்தில், நிர்ணயிக்கப்பட்ட 60 என்கிற எண்ணிக்கையைவிட கூடுதலாக 75 மருந்தகங்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, சென்னையில் 4, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, தேனி, நெல்லை, திருவள்ளூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, ராமநாதபுரம், திருச்சி, காஞ்சீபுரம், விருதுநகர், தஞ்சாவூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, பெரம்பலூர், சிவகங்கை, அரியலூர், கடலூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், சேலம், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர், தூத்துக்குடி, தென்காசி, திருப்பத்தூர், கோவை மற்றும் கரூர் மாவட்டங்களில் தலா 2, தர்மபுரி, நாமக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தலா 1 என மொத்தம் 75 மருந்தகங்கள் தொடங்கப்பட இருக்கின்றன.

131 அம்மா மருந்தகங்கள் மூலம் நடப்பு ஆண்டில் 31-10-2021 வரை ரூ.44.88 கோடிக்கு வர்த்தகமாகி உள்ளது. அதேபோல, 174 கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் ரூ.48.21 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. ஆக மொத்தம் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் 305 அம்மா மற்றும் கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் ரூ.93.09 கோடிக்கு இந்த ஆண்டில் 31-10-2021 வரை வர்த்தகமாகி உள்ளது.

மேலும், அம்மா மற்றும் கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் மருந்து மாத்திரைகளை மையப்படுத்தி கொள்முதல் செய்வதன் மூலம் மருந்து மாத்திரைகளின் விற்பனையை அதிகரிப்பதற்கும், அதன் மூலம் மேலும் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பலன் பெறுவதற்கும் கூட்டுறவுத்துறை ஆக்கப்பூர்வமான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com