தொழில் நுட்ப கல்லூரிகளுக்கு செப்டம்பர் 1ந்தேதி வகுப்பு தொடக்கம்- ஏ.ஐ.சி.டி.இ. அறிவிப்பு

கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்புவரை மாணவர்களை முழு கல்விக்கட்டணம் செலுத்த நிறுவனங்கள் கட்டாயப்படுத்த கூடாது.
ஏஐசிடிஇ
ஏஐசிடிஇ
Published on

சென்னை:

நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழில்நுட்ப கல்லூரிகளும், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் (ஏ.ஐ.சி.டி.இ.) கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா 2-வது அலை காரணமாக புதிய கல்வியாண்டு தொடக்கமும், மாணவர் சேர்க்கையும் தள்ளிப்போய் உள்ளது. இதனை தொடர்ந்து புதிய கல்வியாண்டுக்கான கால அட்டவணை ஏ.ஐ.சி.டி.இ. திருத்தி வெளியிட்டுள்ளது.

தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், முதுநிலை மேலாண்மை நிறுவனங்கள், தொலைதூர கல்வி மற்றும் இணையவழி படிப்புகளை வழங்கும் நிறுவனங்கள் ஆகியவை அங்கீகாரத்தை பெற ஜூன் 30 கடைசி தேதி ஆகும்.

அதேபோல பல்கலைக்கழகங்கள், கல்வி வாரியங்கள் கல்லூரிகளுக்கான இணைப்பை வழங்க ஜூலை 15-ந் தேதி கடைசி நாளாகும். 2020-21 கல்வியாண்டில் மாணவர்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட்டு 31-ந் தேதி முடிவு பெறும்.

தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு செப்டம்பர் 1-முதல் வகுப்புகள் தொடங்கும். முதலாமாண்டு தொழில்நுட்ப படிப்புகளுக்கான வகுப்புகள் செப்டம்பர் 15-ந் தேதி தொடங்குகின்றன.

முழு கட்டணத்தையும் திருப்பி தரும் வகையில், தொழில்நுட்ப படிப்புகளின் இடங்களை திரும்பபெற செப்டம்பர் 10 கடைசி தேதியாகும்.

முதுநிலை மேலாண்மை நிறுவனங்கள் ஆகஸ்ட்டு 2-ந் தேதி முதல் வகுப்புகளை தொடங்கலாம். அதற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட்டு 11 கடைசி நாளாகும். முழு கட்டணத்தையும் திருப்பித் தரும் வகையில், முதுநிலை வேளாண்மை படிப்புகளை திரும்ப பெற ஆகஸ்ட்டு 6 கடைசி நாளாகும்.

கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்புவரை மாணவர்களை முழு கல்விக்கட்டணம் செலுத்த நிறுவனங்கள் கட்டாயப்படுத்த கூடாது. மாணவர்களிடம் கட்டணத்தை 4 தவணைகளில் வசூலிக்க வேண்டும்.

மேலும் கல்லூயில் பணியாற்றும் பேராசிரியர்களை எக்காரணம் கொண்டும் வேலையில் இருந்து நீக்க கூடாது. அவ்வாறு நீக்கியிருந்தால் இந்த உத்தரவுகளை கல்லூரிகள் திரும்ப பெற வேண்டும். பேராசிரியர்களின் மாத ஊதியத்தை உரிய நேரத்தில் வழங்க வேண்டும்.

கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ஆன்லைன் அல்லது ஆப்லைன் அல்லது இரண்டு முறைகளையும் பின்பற்றி வகுப்புகளை தொடங்கலாம் என்று ஏ.ஐ.சி.டி.இ. தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com