பஞ்சாப் அரசு பற்றி மீண்டும் விமர்சனம் - சித்து மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் ஆலோசனை

தங்களுக்கென்று கருத்துக்கள் இருந்தாலும் அதை வெளிப்படையாக சொல்லுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என கட்சி மேலிடப் பொறுப்பாளர் மணிஷ் திவாரி கூறியுள்ளார்.
சித்து
சித்து
Published on

புதுடெல்லி:

பஞ்சாப் மாநில காங்கிரசில் முன்னணி தலைவர்களில் ஒருவராக உள்ள கிரிக்கெட் வீரர் சித்து, மாநில முதல்- மந்திரி அம்ரீந்தர் சிங்குக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார்.

ஏற்கனவே அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நேரத்தில் கட்சிக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறார்.

அவர் தனக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவி தரவேண்டும். இல்லையென்றால், ஆம் ஆத்மி கட்சிக்கு சென்று விடுவேன் என்று மிரட்டி வருகிறார். அவரை ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் அழைத்து சமரசப்படுத்தினார்கள்.

இதன் பிறகு மாநில முதல்- மந்திரி அம்ரீந்தர்சிங், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். அப்போது சித்துவுடன் சமரசமாக செல்லும்படி கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

ஆனால் இந்த சந்திப்புக்கு பிறகும் சித்து, மாநில அரசை விமர்சிப்பதை மேலும் அதிகப்படுத்தி உள்ளார். டுவிட்டர் தளங்களில் அடுத்தடுத்து மாநில அரசுக்கு எதிரான செய்திகளை பரப்பி வருகிறார். இது கட்சி மேலிடத்தை கோபமடைய செய்துள்ளது.

அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு கட்சி மேலிடம் ஆலோசித்து வருகிறது.

இது சம்பந்தமாக கட்சி மேலிடப் பொறுப்பாளர் மணிஷ் திவாரி கூறும்போது, ‘‘கட்சியில் யாராக இருந்தாலும் அவர்களுக்கென்று சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதை மீறுவது சரியல்ல. தங்களுக்கென்று கருத்துக்கள் இருந்தாலும் அதை வெளிப்படையாக சொல்லுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் கட்சியில் புதிதாக வந்தவர்கள், அனுபவம் இல்லாத தலைவர்கள் போன்றவர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்க முடியாது. கட்சிக் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினார்.

எனவே சித்து மீது காங்கிரஸ் விரைவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com