அவினாசியில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

அவினாசியில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன்நகையை மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆசாமிகள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

அவினாசி:

அவினாசி கொடி காத்த குமரன் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34). இவரது மனைவி லாவண்யா (28). இவரது தாயார் சாந்தினி (58). இவருக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தது. இதையடுத்து சாந்தினியை அவருடைய மகள் லாவன்யா ஸ்கூட்டரில் அப்பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார். பின்னர் அங்கு சிகிச்சை முடிந்ததும் இருவரும் அதே ஸ்கூட்டரில் வீட்டிற்கு சம்பவத்தன்று இரவு 9 மணிக்கு வந்து கொண்டிருந்தனர்.

அவினாசி - வஞ்சிபாளையம் பிரிவு அருகே வந்தபோது இவர்களது ஸ்கூட்டருக்கு பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம ஆசாமிகள் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் திடீரென்று லாவண்யா அணிந்து இருந்த 7 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். அப்போது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த தாயும், மகளும் சுதாரித்து கொண்டதால் கீழே விழாமல் தப்பினர்.

இந்த சம்பவம் குறித்து அவினாசி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவினாசி பகுதியில் வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்கள், பெண்களை கண்டறிந்து அவர்களது வீடுகளுக்கு சென்று நகைகளை பறிப்பது, ரோட்டில் இரு சக்கர வாகனத்திலோ, நடந்தோ செல்லும் பெண்களை குறிவைத்து நகை பறிப்பு சம்பவம் பரவலாக நடந்துவருகிறது. இதுபோன்ற நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மாவட்டம் முழுவதும் சோதனை சாவடி அமைத்து வாகன சோதனை நடந்து வருகிறது. அவினாசி ஒன்றியம் நரியம்பள்ளி புதூர், ஆலத்தூர் ஆகிய பகுதிகளில் சோதனை சாவடி அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவினாசி-மங்கலம் ரோட்டில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு அங்கு போலீசார் கண்காணிப்பு பணியில் வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com