காரில் கடத்திய ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல் - 6 பேர் கைது

திருமலை அருகே காரில் கடத்திய செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருமலை:

ஆந்திர மாநிலம், நாகப்பட்லா மேற்கு வனப்பகுதியில் அனந்தபுரம் சரக டி.ஐ.ஜி. கிராந்தி ராணாடாடா தலைமையில் செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை டி.எஸ்.பி. வெங்கடய்யா, ஆர்.எஸ்.ஐ. லிங்காதர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சேஷாபுரம் சிவன் கோவில் பின்புறம் உள்ள வனப்பகுதியில் 2 பேர் பைகளை சுமந்து செல்வதை போலீசார் பார்த்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை சேர்ந்த அசோக், கோவிந்தன் என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில், வனப்பகுதியில் செம்மரம் வெட்ட வந்ததும், சிலர் வனப்பகுதியில் இருப்பதாகவும், அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அசோக், கோவிந்தன் ஆகிய 2 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து செம்மரம் வெட்ட பயன்படுத்த தேவையான கோடாரி, ரம்பம் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்னர்.

இதேபோல், திருப்பதி வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்ட காரில் கடத்திச் சென்ற கடத்தல் காரர்களை விரட்டிச் சென்ற போலீசார் கர்நாடக மாநிலம் கோலார் அருகே காரை மடக்கினர்.

காரில் இருந்த ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 4 பேர், ஆந்திர மாநிலம் சந்திரகிரியை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 5 பேரை கைது செய்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com