குடும்பத்தை மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 4 பேர் தீக்குளிக்க முயற்சி

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தை மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 4 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா தொண்டராம்பட்டு கிழக்கு வலையக்காடு தெருவை சேர்ந்தவர் பிச்சைகண்ணு (வயது 60).

இவர் இன்று மதியம் தனது மனைவி சமுத்திரம் மற்றும் வேம்பரசி, நதியா, சசிகலா ஆகிய 3 மகள்கள், உறவினர் ஒருவருடன் தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது கலெக்டர் அலுவலகம் முன்பு சமுத்திரம் தனது 2 மகள் மற்றும் உறவினர் ஒருவர் ஆகிய 4 பேரும் திடீரென மறைத்து வைத்திருந்த கேனை திறந்து டீசலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அதிர்ச்சியடைந்த போலீசார் ஓடி சென்று அவர்களிடம் இருந்த கேனை பறித்தனர். இதையடுத்து 4 பேர் மீதும் தண்ணீர் ஊற்றினர்.

எதற்காக தீக்குளிக்க முயற்சி செய்தீர்கள் என போலீசார் விசாரித்தனர். இது குறித்து பிச்சைகண்ணு போலீசாரிடம் கூறும்போது:-

எங்கள் தெருவை சேர்ந்த ஒருவர் எனது இடம் , வீட்டை அபகரிக்க முயற்சி செய்கிறார். எங்களிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருகிறார். கடந்த மாதம் என்னையும், என் மனைவியையும் இரும்பு பைப்பால் தாக்கினார். இதில் பலத்தகாயமடைந்த நாங்கள் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினோம். நேற்று முன்தினம் அந்த நபர் வேறொருவருடன் சேர்ந்து என் 2-வது மகளை தாக்கினர். மேலும் வீட்டுக்கு வருகிற குடிநீர் குழாய், மின்கம்பியை சேதப்படுத்தி மின் இணைப்பை துண்டித்து சென்றனர்.

இது தொடர்பாக பாப்பாநாடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. புகார் அளித்ததால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் மேலும் சிலருடன் சேர்ந்து வீட்டை சுற்றி 4 அடி ஆழத்துக்கு குழி தோண்டி வெளியே வர முடியாத அளவுக்கு செய்தனர். எங்களை கொலை செய்யும் நோக்கோடு கோடாரியால் தாக்க முயற்சி செய்தனர். தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதால் என் குடும்பத்துக்கு பாதுகாப்பு அளித்து சம்பந்தபட்ட நபர், அவருக்கு துணையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அப்போது அவர்கள் திடீரென்று தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர். இதையடுத்து போலீசார் உங்கள் பிரச்சனை குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com