சேலத்தில் வெள்ளி பொருட்கள் உற்பத்தி 30 சதவீதம் சரிவு- தொழிலாளர்கள் பாதிப்பு

வெளி மாநிலங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுவதால் வட மாநில வியாபாரிகள் பலர் வெள்ளி பொருட்களுக்கு ஆர்டர் கொடுத்து வருகிறார்கள்.
வெள்ளி கால் கொலுசு
வெள்ளி கால் கொலுசு
Published on

சேலம்:

வெள்ளி தொழிலுக்கு பெயர்பெற்ற நகரம் சேலம். தமிழகத்திலேயே சேலத்தில் தான் வெள்ளி பொருட்கள் அதிக அளவில் தயார் செய்யப்படுகின்றன.

சேலத்தில் செவ்வாய்ப்பேட்டை, குகை, அன்னதானப்பட்டி, நெத்திமேடு, பள்ளப்பட்டி, கந்தம்பட்டி, திருவாக்கவுண்டனூர், சித்தர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மொத்தம் 2 லட்சம் வெள்ளி தொழிலாளர்கள் உள்ளனர்.

இப்பகுதியில் தினசரி 10 டன் அளவில் வெள்ளி கால் கொலுசு, அரைஞாண் கொடி, வெள்ளி குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு, குடம் உள்ளிட்ட பல்வேறு வெள்ளி பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இங்கு உற்பத்தி செய்யப்படும் வெள்ளி பொருட்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் செல்கின்றன. இந்தியாவிலேயே சேலம் வெள்ளி பொருட்கள்தான் தரத்தில் முதன்மையாக உள்ளது.

கொரோனா ஊரடங்கால் வெள்ளி தொழில் இன்னும் இயல்பு நிலைக்கு வரவில்லை. ஏற்கனவே முதல் அலையால் முற்றிலும் இழப்பை சந்தித்த வெள்ளி தொழில் சற்று மீண்டு வந்த நிலையில் 2-வது அலையால் மேலும் இன்னலுக்கு உள்ளானது.

தற்போது ஓரளவு வெள்ளிப்பட்டறைகள் செயல்பட்டு வரும் நிலையில் கொரோனா 3-வது அலை குறித்த அச்சம் மக்களிடையே கவலையை உண்டாக்கி இருக்கிறது. தற்போது வெளி மாநிலங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுவதால் வட மாநில வியாபாரிகள் பலர் வெள்ளி பொருட்களுக்கு ஆர்டர் கொடுத்து வருகிறார்கள்.

தற்போது கொரோனா கட்டுப்பாடுகளால் மீண்டும் தொழில் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்று இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். கர்நாடகாவில் ஊரடங்கு அமலில் உள்ளதால் தமிழகத்தில் இருந்து வெள்ளி பொருட்கள் செல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இதன்காரணமாக வெள்ளி பொருட்கள் உற்பத்தி குறைந்து உள்ளது. இதுபற்றி வெள்ளி பொருட்கள் உற்பத்தியாளர்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாகவே சேலத்தில் வெள்ளி பொருட்கள் உற்பத்தி சுமார் 30 சதவீதம் குறைந்துவிட்டது. ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகளால் பட்டறைகளில் வேலை நேரமும் குறைந்துவிட்டது. தொழிலாளர்களுக்கு வருவாய் பாதிக்கப்பட்டு உள்ளது என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com