

கோவை:
கோவை மாவட்டத்தில் கொரோனா முதல் அலையைவிட இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது.
நாள் ஒன்றுக்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகிறது.
இதனை எதிர் கொள்ளவும், தொற்றின் வீரியத்தை உணர்ந்து மருத்துவமனைகள், மருந்துகள், படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் வசதிகள், தடுப்பூசிகள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகளை அதிகப்படுத்தப்பட்டு வருகின்றது.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து படுக்கைகளும் நிரம்பி விட்டன. இதனால் சிகிச்சைக்கு வரக்கூடிய நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருக்க வேண்டிய நிலை கூட ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் நோக்கில் தனியார் நிறுவனங்கள் 2 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பஸ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கியுள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற ஆக்சிஜன் தேவையுடன் வரும் நோயாளிகளுக்கு உடனடியாக ஆக்சிஜன் வழங்கும் வகையில் தலா 12 ஆக்சிஜன் இருக்கை வசதிகளுடன் கூடிய 2 பேருந்துகளை அரசு ஆஸ்பத்திரி முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்சில் தலா 12 பேர் என மொத்தம் 24 பேர் சிகிச்சை பெற முடியும்.
பஸ்சில் 7 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட 6 பெரிய வடிவிலான சிலிண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 12 நோயாளிகளுக்கு ஒருநாள் முழுவதும் தேவைப்படும் ஆக்சிஜனை இந்த பஸ்சின் மூலம் வழங்கலாம்.
இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறுகையில், இந்த 2 ஆக்சிஜன் பஸ்களும் மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. ஆக்சிஜன் தேவையுடன் வரும் நோயாளிகளுக்கு இந்த பஸ்களில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.