தமிழகம்-புதுவை மீனவர்கள் அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்- இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு அரபிக் கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. #TNRains #IMD #Fishermen
தமிழகம்-புதுவை மீனவர்கள் அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்- இந்திய வானிலை ஆய்வு மையம்
Published on

புதுடெல்லி:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்தது. பின்னர் வங்கக்கடலில் உருவான டிட்லி புயல் வலுவடைந்து வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை தாக்கியது. இதன் காரணமாக இரு மாநிலத்திலும் பலத்த மழை பெய்தது. 

இதற்கிடையே அரபிக்கடலில் உருவான லூபன் புயல் இன்று ஏமன் மற்றும் தெற்கு ஓமன் கடற்கரைகளில் கரை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடலோர ஆந்திரா, கேரளாவின் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல் கர்நாடகத்தின் தெற்கு உள் மாவட்டங்கள், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுவையின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம்.

லூபன் புயல் இன்று ஏமன் மற்றும் தெற்கு ஓமன் கடற்கரைகளில் கரை கடக்கும் சமயத்தில் மணிக்கு 90 முதல் 100 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும். மேற்கு மத்திய அரபிக் கடல் மற்றும் தெற்கு ஓமன், ஏமன் கடற்கரைகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும். ஏதன் வளைகுடாவிலும் இன்று இதன் தாக்கம் இருக்கும். 

எனவே, அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு அரபிக்கடல், தெற்கு ஓமன் கடற்பகுதி, ஏமன் கடற்பகுதி, ஏதன் வளைகுடா பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. 

இதேபோல் அக்டோபர் 15, 16, 17 ஆகிய தேதிகளிலும் தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNRains #IMD #Fishermen

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com