ஆப்கானிஸ்தானில் தொடரும் பயங்கரவாதம் - தலிபான் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 10 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினரின் முகாம்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 வீரர்கள் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Afghanistan #TalibanAttack
ஆப்கானிஸ்தானில் தொடரும் பயங்கரவாதம் - தலிபான் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 10 பேர் பலி
Published on

காபுல்:

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக போரிட்டு வரும் தலிபான் பயங்கரவாத அமைப்பு, கைப்பற்றியுள்ள சில பகுதிகளையும் தாண்டி அதன் எல்லையை விரிவுபடுத்த பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த தாக்குதல்களில் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் என பலரும் தினம் தினம் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர்.

அதன்படி இன்று காலை பட்கிஸ் மாகாணத்தில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் தங்கி இருக்கும் முகாம்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். சற்றும் எதிர்ப்பாராத தாக்குதலையும் சமாளித்து எதிர்த்தாக்குதல் நடத்திய போலீசார் 22 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினர். மேலும், 16 பயங்கரவாதிகள் காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சண்டையில் 5 பாதுகாப்பு படை அதிகாரிகள் வீர மரணம் அடைந்ததாக மாகாண செய்தித்தொடர்பாளர் ஜம்ஷித் சஹாபி தெரிவித்துள்ளார்.

இதேபோல், வடக்கு பக்லான் மாகாணத்தில் உள்ள பாதுகாப்பு படையினர் முகாம்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்  3 ராணுவ வீரர்கள் உட்பட 5 பேர் வீர மரணம் அடைந்தனர். அதே வேளையில் பாதுகாப்பு படையினரின் பதில் தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஒரே நாளில் இருவேறு மாகாணங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு தலிபான் உட்பட எவ்வித பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனினும், தலிபான்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதி ஆதலால் அவர்களே இந்த தாக்குதலை நடத்தி இருக்கக்கூடும் எனவும் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistan #TalibanAttack

X

Maalai Malar
www.maalaimalar.com