புதுடெல்லி:
கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் முஸ்லிம் மதத்தினருக்கு புனித நகராக இருக்கும் ஜெருசலேம் தற்போது இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய கிழக்கு போரின் போது பாலஸ்தீனிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட இந்த நகரை இஸ்ரேல் தனது தலைநகர் என கூறிவருகிறது. ஆனால், இதை எந்த நாடுகளும் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார். மேலும், டெல் அவிவ் நகரில் இருந்து தனது தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றவும் அவர் முடிவு செய்துள்ளதாக கூறினார்.
டிரம்ப்பின் இந்த முடிவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமல்லாது பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், துருக்கி போன்ற ஐரோப்பிய நாடுகளும், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா போன்ற ஆப்ரிக்க நாடுகளும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. ஒட்டுமொத்த அமைதியை குலைக்கும் அறிவிப்பு இது என பல்வேறு நாட்டு தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
பாலஸ்தீன் மீதான பார்வையில் மூன்றாம் நாடுகளுக்கு இடமில்லை என இந்தியாவும் தனது நிலைப்பாட்டை கூறியுள்ளது. இந்நிலையில், இந்தியாவும் தனது தூதரகத்தை டெல் அவிவ் நகரிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்ற வேண்டும் என பா.ஜ.க தலைவர் சுப்ரமணிய சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.