

திருச்சி:
திருச்சி சோமரசம்பேட்டை பொன்நகரை சேர்ந்தவர் அருளானந்தராஜ்(வயது40). விவசாயி. இவருக்கு சொந்தமான நிலம் புங்கனூரில் உள்ளது. இதை 8 பிரிவுகளாக பிரிப்பதற்காக ஆன்லைன் மூலம் ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் உள்ள நில அளவை பிரிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். பதிவு செய்து 9 மாதங்கள் ஆகியும் நிலத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிரித்து கொடுக்கவில்லை.
இந்த நிலையில் தனது நிலத்தை பிரித்து கொடுக்கும்படி ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் உள்ள நில அளவையர் கணேசனை அணுகினார். அதற்கு அவர் ஒரு பிரிவுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 8 பிரிவுகளாக பிரித்து கொடுக்க ரூ.80 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு அவர் என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது, ரூ.50 ஆயிரம் தருகிறேன் என்று கூறி உள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அருளானந்தராஜ் இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை பொறிவைத்து பிடிக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து ரசாயனம் தடவிய ரூ.50 ஆயிரத்தை அருளானந்தராஜிடம் கொடுத்து அனுப்பினர். அவர் ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்திற்கு சென்று அந்த பணத்தை நில அளவையர் கணேசனிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கணேசனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அலுவலகத்தில் சோதனை செய்த போது அதில் கணக்கில் வராத ரூ.63 ஆயிரத்து 500 இருப்பது தெரியவந்தது. அந்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து மணப்பாறையில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர். இதையடுத்து கணேசனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.